Video Crime : டெல்லி கொடூரம்.. துண்டு துண்டாய் காதலியை வெட்டிய நபரை கொல்ல வாளுடன் வந்த கும்பல்.. போலீசாரின் பரபரப்பு வீடியோ
டெல்லியில் இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற நபரை, போலீசாரின் முன்னிலையிலேயே இருவர் வெட்டிக்கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் தன்னுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஷ்ரத்தாவை, அவரது காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் இருந்து பாகங்களை அப்புறப்படுத்திய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளி என கைது செய்யப்பட்டுள்ள அப்தாபிடம் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் அவருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றன. கட்டாய மதமாற்ற முயற்சியும் கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என, கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் தந்தை குற்றம்சாட்டியிருந்தார்.
#WATCH | Police van carrying Shradhha murder accused Aftab Poonawalla attacked by at least 2 men carrying swords who claim to be from Hindu Sena, outside FSL office in Delhi pic.twitter.com/Bpx4WCvqXs
— ANI (@ANI) November 28, 2022
போலீசார் முன்னிலையில் கொலை முயற்சி:
இந்நிலையில், டெல்லி போலீசார் ரோகினி நகர் பகுதியில் உள்ள FSL அலுவலகத்தில் இருந்து, அப்தாபை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது வாகனத்தை இடைமறித்த இரண்டு பேர் தங்களை ஹிந்து சேனா அமைப்பினர் என கூறிக்கொண்டு, கையில் வாளை ஏந்தியவாறு போலீசாரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். உள்ளே இருந்த அப்தாபையும் வெட்ட முயன்றனர். உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய காவலர், கையில் துப்பாக்கியை எடுத்து எச்சரித்த பிறகு வாளை ஏந்தி நின்றவர்கள் அங்கிருந்து விலகி சென்றனர். ஆனாலும், வாகனம் புறப்பட்டதும் மீண்டும் வாளுடன் அவர்கள் போலீசாரின் வாகனத்தை துரத்திச் சென்ற சம்பவம் தலைநகரில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்:
இதனிடையே, ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு, வெட்டப்பட்ட அவரின் உடல் துண்டுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தபோதே, மருத்துவர் ஒருவருடன் அப்தாப் பழகி வந்ததும், பம்பிள் என்ற மொபைல் டேட்டிங் செயலி மூலம் அவர்கள் சந்தித்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், ஷ்ரத்தாவின் மோதிரத்தை அந்த மருத்துவருக்கு அப்தாப் பரிசாக அளித்ததாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே போலீசார் கைப்பற்றிய சிசிடிவி காட்சியில், அப்தாப் தனது வீட்டின் வெளியே ஒரு பையை தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி கடந்த மாதம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகள் அந்த பையில் எடுத்துச் செல்லப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். முன்னதாக, அப்தாப்பின் குடியிருப்பில் இருந்து கனமான கூர்மையான கருவிகளை டெல்லி போலீசார் மீட்டனர். அவை ஷ்ரத்தா வாக்கரின் உடலை வெட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அப்தாப்பின் சத்தர்பூர் குடியிருப்பில் இருந்து முக்கிய ஆதாரங்களை காவல்துறை மீட்டு வருகின்றனர். குருகிராமில் உள்ள அப்தாப் பணியிடத்தில் இருந்து கருப்பு பாலிதீன் பையையும் போலீசார் மீட்டனர்.