Chithra Ramakrishna: ’தலைமுடி ஸ்டைல்... குளியல்... நீச்சல்’ - சாமியார் மெயிலில் இருந்து கைப்பற்றப்பட்டதாக வெளியான திடுக் தகவல்கள்
சித்ரா ராமகிருஷ்ணன் - முகம் தெரியாத சாமியார் இடையேயான மெயில் விவரங்களை சோதனை செய்துவரும் செபி அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்களை வெளியிடலாம் என தெரிகிறது.
தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் மீதான புகார்கள் குறித்து இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரித்து வருகிறது. இமயமலையில் வசிக்கும் முகம் தெரியாத ஆன்மீக சாமியார் ஒருவருடன், பங்குச் சந்தையின் நிதிக் கணிப்புகள், வணிகத் திட்டங்கள் மற்றும் போர்டு நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக புகார் சித்ரா ராமகிருஷ்ணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2013 முதல் 2016 இடைப்பட்ட காலத்தில் தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார் சித்ரா இராமகிருஷ்ணன். தொடர்ந்து தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த பதவியில் இருந்து விலகினார். இமயமலையில் வசிக்கும் ஆன்மீக சாமியாரின் செல்வாக்கின் கீழ் சித்ரா ராம்கிருஷ்ணா எடுத்த முடிவுகளில், எந்த மூலதன சந்தை அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்ரமணியன் என்ற நிர்வாகியை ஆலோசகராகவும், என்.எஸ்.இ-ன் இயக்க அதிகாரியாகவும் நியமித்தது தொடர்பாக இவர் மீது குற்றம் சாட்டப்பப்பட்டது.
இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இந்நிலையில், சாமியார் என்றொருவருக்கு உருவம் இல்லையென்று அது ஒரு ‘ஆன்மீக சக்தி’ என்றும் சித்ரா ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
அவர் கூறியதற்கு எதிர்மறையாக, சாமியாருடன் அவர் பகிர்ந்து கொண்ட இ-மெயில் விவரங்களை செபி கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, கங்கை நதிக்கரையில் சாமியாரைச் சந்தித்தாகவும், இனி வரும் தகவல் பரிமாற்றத்திற்கு மெயில் ஐடியை பயன்படுத்தி கொள்ளுமாறும் சாமியார் தெரிவித்ததாக சித்ரா தகவல் தந்தார்.
இதனால், சித்ரா ராமகிருஷ்ணன் - சாமியார் இடையேயான இ-மெயில் விவரங்களை சோதனை செய்து வரும் செபி, சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், “இன்று நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்கள் தோற்றத்தை மேலும் அழகாக மாற்ற, வெவ்வேறு புது வகை ஸ்டைலில் தலைமுடியை பின்னுவதற்கு நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்!! இது ஒரு அட்வைஸ்தான்!” என சாமியார் இ-மெயில் அனுப்பி இருக்கிறார்.
அதுமட்டுமின்றி, கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சேச்செல்ஸ் நாட்டிற்கு பயணம் செல்வதற்கான திட்டங்கள் பற்றியும் இருவரும் ஆலோசனை செய்துள்ளனர். இது சம்பந்தமான இ-மெயிலில், “பைகளை தயாரா வைத்திருங்கள்.நான் சேச்செல்ஸ் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்... நீங்களும் வர முடியுமா என பார்க்கிறேன்.. உங்களுக்கு நீச்சல் தெரிந்தால் நாம் சேச்செல்ஸ் கடற்கரையில் குளியலை அனுபவித்துவிட்டு ஓய்வெடுக்கலாம்" என சித்ரா ராமகிருஷ்ணனுக்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக செபி தெரிவித்திருக்கிறது. மெயில் விவரங்களை சோதனை செய்து வரும் செபி அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்களை வெளியிடலாம் என தெரிகிறது.
ஆனந்த் சுப்ரமணியன் மனித உளவியலில் பரிச்சயம் கொண்டவர் என்றும், அவர்தான் இமயமலை சாமியாராக புனைந்து சித்ராவை தன் விருப்பப்படி ஆட்டி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.