Sengol: செங்கோல் விவகாரம்; டபுள் சைடு கோல் அடித்த காங்கிரஸ் எம்பி சசிதரூர்..! என்ன சொன்னார் தெரியுமா..?
செங்கோல் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்தது பொய் என காங்கிரஸ் தெரிவித்த நிலையில், வேறு மாதிரியான கருத்தை தெரிவித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் அனைவரையும் குழப்பி உள்ளார்.
மத்திய அரசு அறிவித்தபடியே, இன்று திறந்து வைக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் 'செங்கோல்' நிறுவப்பட்டுள்ளது.
செங்கோல் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து இது தொடர் பேசுபொருளாக மாறியது. சுதந்திரம் கிடைத்தபோது, ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக இந்த செங்கோலை இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பெற்று கொண்டு, அதை நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்கு வழங்கியதாக மத்திய அரசு கூறியது.
சர்ச்சையை கிளப்பும் செங்கோல்:
இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் ஆலோசனைபேரில், திருவாவடுதுறை ஆதீனத்தின் வழிகாட்டுதலில், ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் நேரு செங்கோலை பெற்று கொண்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது. சோழர் காலத்தில் ஒரு மன்னரிடமிருந்து மற்றொரு மன்னருக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கும் போது இம்மாதிரியான செங்கோல் வழங்கப்படுவது வழக்கம்.
அதை பிரதிபலிக்கும் வகையில், சுதந்திரம் பெற்ற நாள் அன்று, செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. செங்கோல் பற்றி மத்திய அரசு தகவல் வெளியிட்டதில் இருந்தே அதை சுற்றி பல்வேறு விதமான தகவல்கள் வலம் வந்த வண்ணம் இருக்கிறது.
ஆனால், மத்திய அரசு வெளியிட்ட தகவலுக்கு போதுமான ஆதாரம் இல்லை என வரலாற்றாசிரியர்கள் முதல் காங்கிரஸ் கட்சி வரை மறுப்பு தெரிவித்து வருகிறது. செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது உண்மை, ஆனால், அது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக நடத்தப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
ட்வீட் செய்து குழப்பிய சசி தரூர்:
மவுண்ட்பேட்டன், ராஜாஜி, நேரு ஆகியோர் ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாக செங்கோலை கருதினர் என்பதற்கு ஆதாரம் இல்லை. இதுதொடர்பான அனைத்து தகவல்களும் பொய் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செங்கோல் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்தது பொய் என காங்கிரஸ் தெரிவித்த நிலையில், வேறு மாதிரியான கருத்தை தெரிவித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் அனைவரையும் குழப்பி உள்ளார்.
"செங்கோல் சர்ச்சையில் இரு தரப்பிலும் நல்ல வாதங்கள் உள்ளன என்பதே எனது சொந்த கருத்து. செங்கோல் பாரம்பரியத்தின் தொடர்ச்சியை பிரதிபலிக்கிறது. இறையாண்மை மற்றும் தர்மத்தின் ஆட்சியை உள்ளடக்கியுள்ளது என அரசாங்கம் சரியாக வாதம் முன்வைத்துள்ளது.
அரசியலமைப்பு மக்களின் பெயரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், இறையாண்மை இந்திய மக்களிடம் தங்களுடைய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது என்றும், அது தெய்வீக உரிமையால் வழங்கப்பட்ட அரச சிறப்புரிமை அல்ல என்றும் எதிர்க்கட்சிகள் சரியாக வாதிடுகின்றன.
சமரசம்:
ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாக செங்கோலை மவுண்ட்பேட்டன் நேருவுக்கு வழங்கினார் என்ற ஆதாரம் இல்லாத விவாதத்திற்குரிய வாதத்தை கைவிட்டால் இரு வாதங்களையும் ஏற்று கொண்டு சமரசம் செய்து கொள்ளலாம்.
அதற்கு மாறாக, செங்கோல் என்பது அதிகாரத்தின் பாரம்பரிய சின்னம் என்றும், அதை மக்களவையில் வைப்பதன் மூலம், இறையாண்மை அங்கு உள்ளது. எந்த மன்னரிடமும் இல்லை என்பதை இந்தியா உறுதிப்படுத்துகிறது. நமது நிகழ்காலத்தின் மதிப்புகளை உறுதிப்படுத்த கடந்த காலத்திலிருந்து இந்த சின்னத்தை தழுவுவோம்" என சசி தரூர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.