Shashi Tharoor Vs Congress: பாஜகவுக்கு தாவும் சசி தரூர்.? மோடிக்கு ஒரே புகழாரம்.. காங்கிரசுக்குள் புகைச்சல்
டெல்லியில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், அவரை புகழ்ந்து தள்ளியதால், காங்கிரஸார் எரிச்சல் அடைந்துள்ளனர்.

காங்கிரஸ் எம்பி சசி தரூர், கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்துக் கட்சி குழு கூட்டத்தில் இடம்பெற்றார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை புகழ்ந்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு, காங்கிரஸாரை எரிச்சலூட்டியுள்ளது. இதனால், சசி தரூர் பாஜகவிற்கு தாவப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சமீப காலமாக காங்., தலைமையுடன் மோதிவரும் சசி தரூர்
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்பி-யாக உள்ள சசி தரூர், சமீப காலமாகவே, கட்சித் தலைமையுடன் மோதல் போக்கிலேயே இருந்து வருகிறார். மேலும், பிரதமர் மோடியை அவர் அடிக்கடி பாராட்டி வகிறார். இது, கட்சியினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின், இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து கட்சிக் குழு கூட்டத்தில், தனது கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி சசி தரூர் கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து, அவர் பிரதமர் மோடியை பாராட்டி வருகிறார். இந்நிலையில், டெல்லியில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறி, மோடியின் பேச்சை புகழ்ந்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் சசி தரூர். இது தான் தற்போது காங்கிரஸ் கட்சியினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
சசி தரூரின் பதிவு என்ன.?
சசி தரூர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடி பங்கேற்ற கருத்தரங்கு ஒன்றில் தானும் பங்கேற்றதாகவும், இந்தியா வளர்ச்சி பெறுவதற்கான நேர்மறையான மாற்றங்கள் குறித்தும், காலனித்துவத்துக்கு பிந்தைய மனநிலை பற்றியும் பிரதமர் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “துடிப்பான பொருளாதாரம் காரணமாக, இந்தியா வெறும் வளரும் சந்தையல்ல. உலகத்துக்கான வளரும் மாடல் என கூறியதுடன், எப்போதும் நான் தேர்தல் மனநிலையில் இருப்பதாக பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால், மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் உணர்ச்சிகரமான மனநிலையில் இருக்கிறேன்“ என பிரதமர் தனது உரையில், குறிப்பிட்டதாகவும் சசி தரூர் கூறியுள்ளார்.
அதோடு, பிரதமர் தனது பேச்சில் முக்கிய அம்சமாக, மெக்காலேயின் 200 ஆண்டுகால அடிமை மனநிலை முறியடிப்பது பற்றிய கருத்து அமைந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவின் பாரம்பரியம், மொழிகள் மற்றும் அறிவு அமைப்புகளில் பெருமையை மீட்டெடுக்க 10 ஆண்டு தேசிய இயக்கத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய தேசியவாதத்திற்காக குரல் எழுப்ப ராம்நாத் கோயங்கா ஆங்கிலத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டிருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில், பிரதமரின் உரை பொருளாதார கண்ணோட்டமாகவும், நடவடிக்கைக்கான கலாச்சார அழைப்பாகவும் அமைந்ததாகவும், முன்னேற்றத்துக்காக தேசம் துடிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ள சசி தரூர், உடல்நலம் சரியில்லாத நேரத்திலும் அந்த கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்ததாகவும் தனது பதிவில் கூறியுள்ளார்.
Attended PM @narendramodi’s #RamnathGoenkaLecture at the invitation of @IndianExpress last night. He spoke of India's "constructive impatience" for development and strongly pushed for a post-colonial mindset.
— Shashi Tharoor (@ShashiTharoor) November 18, 2025
The PM emphasized that India is no longer just an 'emerging market'… pic.twitter.com/97HwGgQ67N
ஏற்கனவே, பீகார் படுதோல்வியால் காங்கிரஸ் மேலிடம் கடும் விரக்தியில் உள்ள நிலையில், சசி தரூரின் இந்த பதிவால் அதிருப்தி அடைந்துள்ளது. மேலும், பிரதமர் மோடிக்கு தொடர்ந்து புகழாரம் சூட்டி வரும் சசி தரூர், ஒருவேளை பாஜகவிற்கு தாவி விடுவாரோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.






















