Electoral Bonds: தேர்தல் பத்திரம்.. பாஜகவுக்கு நன்கொடை கொடுத்தது யார்? அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்!
Electoral Bonds News in Tamil: எஸ்பிஐ வங்கி சமர்பித்துள்ள சீரியல் எண்கள் மூலம் தேர்தல் பத்திரம் வழியாக யார், யாருக்கு நன்கொடை அளித்தார்கள் என்பது தெரிய வரும்.
Electoral Bonds: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தேர்தல் பத்திரத்தின் சீரியல் எண்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமர்பித்துள்ளது. சமர்பிக்கப்பட்டுள்ள சீரியல் எண்கள் மூலம் யார், யாருக்கு நன்கொடை அளித்தார்கள் என்பது தெரிய வரும்.
தேர்தல் பத்திரத்தில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்:
தேர்தல் பத்திரம் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் தொடங்கி 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் வரை, தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்ட நன்கொடை விவரங்கள் முதலில் வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2018ஆம் ஆண்டு, மார்ச் மாதம் தொடங்கி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான விவரங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. ஆனால், தேர்தல் பத்திரத்தின் சீரியல் எண்களை எஸ்பிஐ வங்கி வெளியிடாமல் இருந்தது.
இந்த சீரியல் எண்கள் மூலம்தான் எந்த நிறுவனம், எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால், சீரியல் எண்களை வெளியிட தடைக் கோரி பல தொழில் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
பாஜகவுக்கு நன்கொடை கொடுத்தது யார்?
ஆனால், தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், இன்று மாலை 5 மணிக்குள் சீரியல் எண்களை வெளியிட கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, தேர்தல் பத்திரத்தின் சீரியல் எண்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ இன்று சமர்பித்துள்ளது.
சீரியல் எண்களை சமர்பித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி பிரமாண பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், "தேர்தல் பத்திரத்தை வாங்கியவர்களின் பெயர், எவ்வளவு நன்கொடை அளிக்கப்பட்டது. தேர்தல் பத்திரத்தின் சிறப்பு எண்கள், பத்திரங்களை பணமாக்கிய கட்சிகளின் பெயர்கள், அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கு எண்களின் கடைசி நான்கு இலக்கங்கள், தேர்தல் பத்திரம் மூலம் எவ்வளவு நன்கொடை பெறப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் எஸ்பிஐ வங்கியிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு காரணமாக முழு வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் KYC விவரங்கள் வெளியிடப்படவில்லை. நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளை அடையாளம் காண இந்த விவரங்கள் அவசியமில்லை" என பிரமாண பத்திரிகையில் எஸ்பிஐ வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க: Ponmudi Case: ஆளுநர் என்ன செய்கிறார்? இதை சீரியசாக பார்க்கிறோம்; பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் கறார்