Saudi Bus Accident: என்ன கொடுமை.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர்; 3 தலைமுறைகளை பலிகொண்ட சவுதி பேருந்து விபத்து
சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் 18 பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பேருந்து-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்து, அதில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் 18 பேர் உயிரிழந்தது சோகம் தற்போது தெரியவந்துள்ளது.
பேருந்து-டீசல் லாரி மோதி விபத்து
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சவுதி அரேபியாவிற்கு உம்ரா புனித பயணத்தை மெற்கொண்டனர். இந்நிலையில், அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு, மதீனாவிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஜோரா என்ற இடத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது, டீசல் ஏற்றிவந்த லாரி ஒன்று பேருந்தில் மோதியுள்ளது. இதில் பேருந்து தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்து, இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் மதீனாவிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால், தீப்பிடித்து எரிந்த பேருந்தில் இருந்து அவர்களால் தப்ப முடியவில்லை.
இதுவே அதிக உயிரிழப்புக்கு காரணம் என்றும், பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானதால், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் சவாலானதாக இருந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கோர விபத்தில், பேருந்தில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட 42 இந்தியர்கள் பலியாகினர். தற்போது பலி எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் 24 வயதான முகமது அப்துல் சோயிப் என்ற ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
இதற்கிடையே, சவுதி பேருந்து விபத்தில் ஐதராபாத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் பலியான துயரம் நிகழ்ந்துள்ளது. மூன்று தலைமுறைகளை சேர்ந்த பெரியவர்கள் குழந்தைகள் என, 18 பேர் மெக்காவிற்கு சென்றுவிட்டு, வரும் சனிக்கிழமை நாடு திரும்ப திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த சோகம் அரங்கேறியுள்ளது. பலியான 18 பேரில், 9 பேர் குழந்தைகள் எனவும், 9 பேர் பெரியவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.





















