சபரிமலை : தங்க அங்கி பவனி இன்று ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது! மண்டல பூஜை குறித்த முக்கிய தகவல்!
சபரிமலையில் டிச. 27ல் நடைபெறும் மண்டல பூஜைக்காக தங்க அங்கி பவனி இன்று ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர்.
இந்த நிலையில், கடந்த மாதம் நவம்பர் 16ம் தேதி மாலை முதல் சபரிமலையில் மண்டல காலம் துவங்கி நடந்து வருகிறது. தொடக்கத்தில் மூன்று நாட்கள் கட்டுக்கடங்கா கூட்டத்தால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். கூட்ட நெரிசல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நிலைமை சீரடைந்து சில நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் அதிக கூட்டம் தொடர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரமாக குறைக்கப்பட்டதால் நீண்ட காத்திருப்பு மற்றும் நெரிசலும் குறைந்துள்ளது.
குறிப்பாக சபரிமலையில் டிச. 27ல் நடைபெறும் மண்டல பூஜைக்காக தங்க அங்கி பவனி இன்று ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது. சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் கடந்த நவம்பர் 17ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 27ல் மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று காலை 10:10 முதல் 11:30 க்குள் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும் என்று தந்திரி மகேஷ் மோகனரரு கூறியுள்ளார். இதற்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து இன்று அதிகாலை தங்க அங்கி பவனி புறப்படுகிறது.
சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் தங்க அங்கி வைக்கப்பட்டு மூன்று நாட்கள் பல்வேறு இடங்களில் பவனியாக வந்த பின் டிசம்பர் 26 மதியம் ஒரு மணிக்கு பம்பை வந்தடையும். இங்கிருந்து தலைசுமையாக சன்னிதானம் கொண்டுவரப்பட்டு அன்று மாலை 6:30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இரவு தங்க அங்கி அகற்றப்படும். மீண்டும் மறுநாள் காலை மண்டல பூஜையின்போது தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜை நடக்கும். இந்தத் தங்க அங்கி மறைந்த திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கியதாகும். 27 - ம் தேதி மண்டல பூஜை முடிந்து அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மகர விளக்கு கால பூஜைகளுக்காக 30- ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.





















