சபரிமலை: பக்தர்கள் கூட்டம், அரவணை விற்பனை சாதனை! ரூ.210 கோடி வருமானம் - எதிர்பாராத திருப்பம்!
மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வருகிற 23-ந்தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
பிற கோவில்கள் போல ஐயப்பன் கோவில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. இந்த கோவிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோசத்துடன் தரிசனம் செய்வார்கள்.
சபரிமலையில் நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடக்கிறது. மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வருகிற 23-ந்தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் சன்னிதானத்தில் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பிறகு தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சபரிமலையில், நடப்பு சீசனையொட்டி, நடை திறந்த நாள் முதல் 30 நாட்களில் ரூ.210 கோடி வருமானம் வந்துள்ளது. இதில் அரவணை விற்பனை மூலம் ரூ.106 கோடி கிடைத்துள்ளது. அதாவது 1.06 கோடி டின் அரவணை 30 நாட்களில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மொத்த வருவாய், கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அதிகமாகும். சரியான திட்டமிடல் மூலம் கூட்ட நெரிசல் இன்றி பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் தங்கும் அறைகளுக்கு முன் பணம் செலுத்தும் பக்தர்கள் அந்த பணத்தை திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து தனி கவுண்ட்டர் அமைக்கப்பட்டு உள்ளது.
வழக்கத்தைவிட இந்த ஆண்டு, அரவணை விற்பனை அதிகரித்ததையடுத்து, தட்டுப்பாட்டை சமாளிக்க, ஒரு பக்தருக்கு 20 டின் அரவணை என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. நிலைமை சீராகும் வரை இந்த கட்டுப்பாடு தொடரும். ஆனாலும் தினசரி 4 லட்சம் முதல் 4½ லட்சம் வரை அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி 3 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இருப்பில் உள்ள அரவணை எடுக்கப்பட்டு வருகிறது. உடனடி தரிசன முன்பதிவு தளர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.





















