Sabarimala: தங்கத்தை தொடர்ந்து நெய் திருட்டு.. சபரிமலையில் நடப்பது என்ன? - கொதிக்கும் பக்தர்கள்!
சபரிமலையில் நெய் விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.16 லட்சம் மதிப்புள்ள நெய் பாக்கெட்டுகள் காணாமல் போனதாக தெரிய வந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நெய் விற்பனையிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில்
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. பாரம்பரிய வரலாறு கொண்ட இந்த கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சபரிமலையைப் பொறுத்தவரை கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய மாதங்கள் சீசன் காலமாகும். அப்போது மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக இரண்டு மாத காலங்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். மற்ற தமிழ் மாதங்களில் முதல் 5 நாட்கள் மட்டும் நடை திறக்கப்படும்.
நகை திருட்டு சர்ச்சை
இப்படியான நிலையில் சபரிமலையின் ஐயப்பன் சிலை அமைந்திருக்கும் கருவறையின் மேற்கூரை மற்றும் வெளிப்பகுதி ஆகியவை தங்கத்தகடு பதிக்கப்பட்டிருக்கும். இதற்கு தேவையான தங்கம் மற்றும் காப்பரை தொழிலதிபர் விஜய் மல்லையா பல ஆண்டுகளுக்கு முன் வழங்கியிருந்தார். இவை வாயிலில் இருக்கும் துவார பாலகர்கள் சிலைக்கும் சேர்த்து பொறுத்தப்பட்டது. இந்த நிலையில் இதனை பழுது நீக்க எடுத்து சென்ற நிலையில் அப்போது தங்கம் திருடப்பட்டதாக பெரும் குற்றச்சாட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் எழுந்தது.
இது ஐயப்ப பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார். அதனைத் தவிர தேவசம் போர்டு ஊழியர்களும் சிக்கினர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெய் விற்பனை பணம் கையாடல்?
இந்த நிலையில் சபரிமலையில் நெய் விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.16 லட்சம் மதிப்புள்ள நெய் பாக்கெட்டுகள் காணாமல் போனதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தேவசம் போர்டு விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதாவது விற்பனை செய்யப்பட்ட நெய்யின் அளவும், தேவசம் போர்டுக்கு செலுத்தப்பட்ட பணத்திலும் வித்யாசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 16 ஆயிரம் நெய் பாக்கெட்டுகள் காணாமல் போயுள்ளது. சபரிமலையில் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய் 100 மி.லி. கொண்ட பாக்கெட் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த பணம் தான் செலுத்தப்படாமல் உள்ளது. நடப்பு மண்டல சீசனில் பக்தர்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்ட நெய்யில் இந்த முரண்பாடு கண்டறியப்பட்டது. தொடர்ச்சியாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் திருட்டு சர்ச்சை எழுந்து வருவது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகப்பெரிய கவலையை உண்டாக்கியுள்ளது. இது நிச்சயம் 2026 கேரள சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















