சபரிமலை ஐயப்பன் கோவில்: பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பு! சத்யா அன்னதானம் வரவேற்பு! முழு விபரம் இதோ!
சபரிமலையில் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 60 முதல் 65 பக்தர்கள் 18ம் படி ஏறி, ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோவில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோவிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜை நிறைவடைந்து, மகரவிளக்கு பூஜை சீசன் துவங்கி உள்ளது. இந்தநிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக மூன்று வேளையும் தேவசம் போர்டு சார்பில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளது.
இந்த ஆண்டு முதல் சபரிமலை அன்னதானத்தில் கேரளாவின் பாரம்பரிய உணவான சத்யா பரிமாறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கடந்த சில நாட்களாக ஐயப்ப பக்தர்களுக்கு சத்யா பரிமாறப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மண்டல காலம் துவங்கியது முதல் ஜனவரி 1ம் தேதி வரை 8,74,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு கூறும் புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது. இவர்களில் 3,01,309 பேருக்கு காலை உணவும், 3.40 லட்சம் பேருக்கு இரவு உணவும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 23,000 பேருக்கு சத்யா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
கேரள சத்யாவில் பொன்னி சாதம், பருப்பு, பப்படம், அவியல், தோரன், சாம்பார், ரசம், பாயசம் போன்ற உணவுகளும் அடங்கும். ஒவ்வொரு நாளும 3் பல்வேறு வகையான பாயாசம் வழங்கப்படுகின்றன. பிற மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களிடம் கேரளா சத்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகரவிளக்கு உற்சவத்திற்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டு ஐந்து நாட்கள் ஆகும் நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இரவு 7 மணி வரை 75,267 பேர் பம்பா வழியாக மலையேறி உள்ளனர். டிசம்பர் 30ம் தேதியன்றே 57,256 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். டிசம்பர் 31ம் தேதியன்று 90,350 பேரும், ஜனவரி 01ம் தேதியன்று 87,774 பேரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 60 முதல் 65 பக்தர்கள் 18ம் படி ஏறி, ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தே அதிக அளவிலான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்கின்றனர். அடுத்த 2 நாட்களுக்கு கூட்டம் இதே அளவிலேயே இருக்கும் என்றும், அதற்கு பிறகு சற்று குறையும் என்றும், மீண்டும் மகரவிளக்கு சில நாட்களுக்கு முன்பு கூட்டம் அதிகரிக்கும் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த அனுபவம் வாய்ந்த காவல் அதிகாரிகளை பணியில் அமர்த்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு சபரிமலை சீசன் நிறைவடைய இன்னும் 16 நாட்களே உள்ளதால் வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. பெரும்பாலான பக்தர்கள் சன்னிதானத்திலேயே இரண்டு நாட்கள் வரை தங்குவதால், சன்னிதானத்தில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதோடு பெரிய பாதையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் மலையேற காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சன்னிதானத்தில் யாரும் தங்க வேண்டாம் என போலீசார் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர். கூட்ட நெிரசல் காரணமாக பம்பா மற்றும் மரக்கூட்டம் பகுதிகளில் பக்தர்கள் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.





















