சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்திகள் தேர்வு! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?
மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறந்திருக்கும். அதன்படி தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறந்திருக்கும். அதன்படி தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். சபரிமலை கோவில் நடைதிறக்கப்படும் முதல் நாளே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய வருகை புரிவர். உலகப்புகழ்பெற்ற இக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஐயப்பனை தரிசிப்பதற்காக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என ஒரு மண்டலம் எனும் 48 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடித்து, இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானத்துக்கு வருவது வழக்கம்.
மற்ற கோவில்கள் போல ஐயப்பன் கோவில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. இந்த கோவிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். குறிப்பாக மாதாந்திர பூஜைக்காகவும் ஓணம், விஷு, பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு தினங்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவது கூடுதல் சிறப்பு.
தற்போது கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். நேற்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும். இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு காலை 8 மணிக்கு நடைபெற்றது. ஐயப்பன் கோவிலுக்கு 14 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 13 பேரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களின் பெயர்கள் தனித்தனி குடங்களில் போடப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. ஐயப்பன் கோவில் மேல்சாந்தி தேர்வுக்கான சீட்டை பந்தளம் அரண்மனை பிரதிநிதி காஷ்யப் வர்மா எடுத்தார். அதில் சபரிமலை மேல்சாந்தியாக சாலக்குடியை சேர்ந்த பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் ஆரேஸ்வரம் ஸ்ரீதர்மசாஸ்தா ஆலயத்தின் மேல்சாந்தியாக உள்ளார்.இதேபோல் மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தி தேர்வுக்கான சீட்டை பந்தளம் அரண்மனை பிரதிநிதியான மைதிலி என்ற சிறுமி எடுத்தார். அதில் கொல்லம் மய்யநாட்டை சேர்ந்த மனு நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய மேல்சாந்திகள் இருவரும் நடப்புஆண்டு மண்டல பூஜை சீசன் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் மற்றும் திருப்பணிகளை மேற்கொள்வார்கள். மண்டல பூஜை தொடங்குவதற்கு முன்னதாக அவர்கள் மேல்சாந்தியாக பொறுப்பேற்பார்கள்.





















