LPG Cylinder Price: "சிலிண்டர் விலை குறைப்பு; நாடகத்தை அரங்கேற்றுகிறது பாஜக" - சாடும் எதிர்க்கட்சிகள்
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
LPG Cylinder Price: நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
சிலிண்டர் விலை குறைப்பு:
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலும், இந்த கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. கடைசியாக கடந்த மார்ச் 1ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் குறைக்கப்பட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக வலியுறுத்தி வந்தனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தபோதும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்காமல், தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக குறைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர்.
காங்கிரஸ்:
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் கூறுகையில், "ஒவ்வொரு தேர்தலின்போதும் விலை குறைப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது பாஜக. சிலிண்டர் விலையை குறைக்கும் மோடி அரசு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறுகையில், "சமையல் சிலிண்டர் விலையை குறைத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று மோடி அரசு நினைக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திடீரென மத்திய அரசு குறைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. சர்வதேச சந்தையின் தற்போதைய நிலவரப்படி சிலிண்டர் விலையே ரூ.200 ஆக தான் இருக்க வேண்டும். 200 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய சிலிண்டர் விலை 1,200 ரூபாய் வரை உயர்த்திவிட்டு விலை குறைப்பதாக நாடமாடுகிறது பாஜக" என்று தெரிவித்துள்ளார்.
”தோல்வி பயத்தால் பிரதமர் மோடி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைய சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றமே முக்கிய காரணம். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் துரும்பை பிடித்துக் கொண்டாவது கரையேற துடிக்கிறது பாஜக. பிரதமர் மோடி தோல்வி பயத்தில் உள்ளதால் வரும் மாதங்களில் மக்களுக்கு மேலும் பல சலுகைகள் கிடைக்கும்" என்றார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கூறுகையில், "யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னை என்ற பழமொழிக்கு ஏற்ப தான் மத்திய அரசு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது. 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது ரூ.417 ஆக இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.1,118ஆக உள்ளது. இப்படி இருக்கும்போது, 200 ரூபாய் குறைப்பதால் மக்கள் என்ன பயனடைவார்கள். விலை குறைப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது பாஜக. கடந்த 9 ஆண்டுகளில் சிலிண்டர் விலையை கூடுதலாக ரூ.800 உயர்த்திவிட்டு, பாஜக அரசு தற்போது ரூ.200 மட்டும் குறைத்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற நாடகங்களை மத்தியில் உள்ள பாஜக நடத்திவருகிறது" என்று தெரிவித்துள்ளார்.