Mumbai Rainfall: 13 மணி நேரத்தில் 250 மி.மீ! மும்பையை புரட்டிப்போட்ட பேய் மழை! ரெட் அலர்ட்
மே 25 ஆம் தேதி இரவு 10 மணி முதல் மே 26 ஆம் தேதி காலை 11 மணி வரை நரிமன் பாயிண்டில் அதிகபட்சமாக 252 மிமீ மழை பெய்தது,
மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது, நேற்ற்ய் திங்கட்கிழமை(26.05.25) காலை 11 மணிக்கு முடிவடைந்த அளவீடுகளின் படி 13 மணி நேரத்தில் தெற்கு மும்பையில் மட்டும் 250 மிமீ மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை:
மே 26 அன்று தென்மேற்கு பருவமழை மும்பையில் முன்கூட்டியே தொடங்கியது, அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மும்பை மழையானது வெளுத்து வாங்கியது, இதனால் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கைகளை விடுத்து, மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
கனமழை எச்சரிக்கை:
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர் மற்றும் சதாரா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராய்காட், புனே, பீட், ஹிங்கோலி, நான்டெட் மற்றும் பர்பானி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, ஜல்கான், நாசிக், அஹில்யாநகர், சாங்லி, ஜல்னா மற்றும் மகாராஷ்டிராவின் பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
"பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று, பலத்த காற்று (மணிக்கு 40-50 கி.மீ) மற்றும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 3-4 மணி நேரத்தில் மும்பை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்" என்று இந்திய வானிலை தெரிவித்துள்ளது.
தெற்கு மும்பையில் அதிகனமழை:
பிரஹன்மும்பை மாநகராட்சி பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, மே 25 ஆம் தேதி இரவு 10 மணி முதல் மே 26 ஆம் தேதி காலை 11 மணி வரை நரிமன் பாயிண்டில் அதிகபட்சமாக 252 மிமீ மழை பெய்தது, அதைத் தொடர்ந்து பிஎம்சி தலைமையகம் (216 மிமீ) மற்றும் கொலாபா பம்பிங் ஸ்டேஷன் (207 மிமீ) மழை பெய்தது. கடுமையான மழைப்பொழிவுடன் காலை 11:24 மணிக்கு 4.75 மீட்டர் உயர அலையும் ஏற்பட்டது.
தெற்கு மும்பையின் பிற பகுதிகளான ஓவல் மைதானம், ஃப்ளோரா ஃபவுண்டன், மந்திராலயா, சிஎஸ்எம்டி மற்றும் சர்ச்கேட் நிலையம் ஆகியவை வெள்ளத்தால் அதிக பாதிக்கப்படும் பகுதிளாகும்.
போக்குவரத்து பாதிப்பு:
இந்த மழையால் பேருந்து மற்றும் ரயில் சேவையில் பெரிய பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. பலத்த மழையால் கிங் சர்க்கிள், ஹிந்த்மாதா, தாதர் டிடி, பரேல் டிடி, கிங்ஸ் சர்க்கிள், கலாசௌகி மற்றும் ஜேஜே மார்க் உள்ளிட்ட பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அந்த வழியாக சென்ற பேருந்து சேவைகள் மாற்றுப்பாதையில் இயக்கபட்டது.
மேலும் ரயில் தண்டவாளங்களில் கடும் தண்ணீர் தேங்கியதால் மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயின் புறநகர் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
கேரளாவில் பருவமழை தொடங்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் பருவமழை தொடங்கியது, கடந்த 75 ஆண்டுகளில் பருவமழை மகாராஷ்டிராவில் முன்கூட்டியே தொடங்குவது முதல்முறையாக பார்க்கப்படுகிறது. மழையின் தாக்கம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது






















