Uttarkashi Tunnel Heroes: உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து - 41 உயிர்களை காப்பாற்றிய ”ரியல் ஹீரோக்கள்” யார் தெரியுமா?
Uttarkashi Tunnel Heroes: உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் 41 பேரை காப்பாற்றிய பணியில், முக்கிய பங்காற்றிய உண்மையான ஹீரோக்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Uttarkashi Tunnel Heroes: உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் முக்கிய பங்காற்றிய எலி வளை வீரர்கள் தொடங்கி பிரதமர் அலுவலக அதிகாரிகள் வரையிலான விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து:
உத்தராகண்டின் சார் தாம் வழித்தடத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, கடந்த 12ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியாற்றி வந்த 41 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கடும் முயற்சிகளுக்கு பிறகு, 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ் தொடங்கி, எலி வளை சுரங்க தொழிலாளர்கள் வரை பல்வேறு தரப்பினரின் 400 மணி நேர முயற்சிகளுக்குப் பிறகு தான் இது சாத்தியமாக்கியுள்ளது. அப்படி, இரவு பகல் பாராமல் உழைத்து 41 உயிர்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றிய சில நிஜ ஹீரோக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
எலி வளை சுரங்கப் பணியாளர்கள்:
இந்தியாவில் தடை செய்யப்பட்ட எலி வளை சுரங்க முறை, 41 பணியாளர்களின் உயிரை காக்கும் என யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். ஆனால், அது தான் உண்மையானது. டெல்லியை சேர்ந்த குரேஷி மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குமார் ஆகியோரின் தலைமையில், 12 பேர் கொண்ட குழு கடந்த 27ம் தேதியன்று விபத்து நிகழ்ந்த பகுதியை வந்தடைந்தது. தொடர்ந்து, 25 டன் எடையிலான ஆகர் இயந்திரம் தோல்வியை சந்தித்த பகுதியில் களமிறங்கிய அந்த குழு, கைகளாலேயே பாறைகளை குடைந்து உள்ளே சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக பேசிய குரேஷி, “நாங்கள் மறுமுனையை அடைந்தபோது எங்களை பார்த்த அங்கிருந்த தொழிலாளர்கள், கட்டி அணைத்துக் கொண்டனர். தோளின் மீது சுமந்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்” என கூறினார்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஜெனரல் ஹஸ்னைன்:
பல அமைப்புகள் ஒருங்கிணைந்து 41 பேரின் உயிரை காப்பாற்றும் பணியை மேற்கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அந்த பணிகளை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக செயல்படுத்திய பெருமை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற லெப்டினண்ட் ஜெனரலான சையது அடா ஹஸ்னைனை சேரும். பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு, அவற்றிற்கு இடையேயான பணிகளை அருமையாக ஒருங்கிணைத்தார். பல்வேறு முயற்சிகள் தோல்விகளை சந்தித்தாலும், சூழலை சுமூகமாக கையாண்டு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்தார். ஸ்ரீநகரில் நிறுத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் GOC 15 படைப்பிரிவின் உறுப்பினராக ஹஸ்னைன் இருந்துள்ளார்.
அர்னால்ட் டிக்ஸ், சுரங்கப்பாதை நிபுணர்:
41 தொழிலாளர்களை காப்பாற்றுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் இந்தியா தவறவிடவில்லை. பல சர்வதேச நிபுணர்களின் உதவியையும் நாடிய நிலையில், அதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ் மிக முக்கிய பங்காற்றினார். ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் அண்டர்கிரவுண்ட் ஸ்பேஸ் அசோசியேஷனில் ஆஸ்திரேலியாவின் தலைவராக டிக்ஸ் இருக்கிறார். கடந்த 20ம் தேதி விபத்து நடந்த இடத்திற்கு வந்த இவர் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து விதமான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கினார். 41 தொழிலாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்ற பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.
ஜெனரல் வி.கே. சிங் (ஓய்வு பெற்றவர்), மத்திய இணை அமைச்சர்:
முன்னாள் ஜெனரலும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான இணை அமைச்சருமான வி.கே. சிங், சுரங்கப்பாதை விபத்து நேர்ந்தது முதல் மீட்பு பணிகள் முழுமையாக முடியும் வரை அங்கேயே இருந்தார். தனது ராணுவ அனுபவத்தின் மூலம், மீட்பு பணியின் போது தேவையான ஆலோசனைகளை வழங்கினார். செவ்வாய் இரவு, சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து ஒவ்வொருவராக வெளியே கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களுக்கு பக்கபலமாக அவர் நின்றிருந்தார்.
பிரதமர் அலுவலக அதிகாரிகள்:
கடைசியாக கூறப்பட்டாலும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் பணி என்பது எந்த விதத்திலும் சளைத்தது இல்லை. மிட்பு பணிக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே, சரியான ஒருங்கிணைப்பைப் பேணுவதில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் தடையின்றி உதவினர். துணை செயலாளர் மங்கேஷ் கில்டியால் தொடங்கி பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பிகே மிஸ்ரா வரை, சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கைகளில் நேரடியாக களத்தில் இருந்தும் டெல்லியிலேயே இருந்தும் உதவியுள்ளனர். தனியார் ஊடகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மீட்பு பணியில் 600-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அவர்களின் ஒட்டுமொத்த முயற்சியின் வெளிப்பாடாக தான், சுரங்கப் பாதையில் சிக்கி இருந்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

