Ranjan Gogoi MP: ரஞ்சன் கோகாய் எம்.பி: 3 ஆண்டுகளில் 0 கேள்வி, 0 விவாதம்.. எழும் கடும் விமர்சனங்கள்...
அயோத்தி வழக்கில் நீதிபதியாக இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள ரஞ்சன் கோகோயின் செயல்பாடு குறித்து பலரும் விமர்சனங்களை வைத்து வருகின்றன.
அயோத்தி வழக்கில் நீதிபதியாக இருந்து, ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் நசீர் நிகழ்வைத் தொடர்ந்து, பலரும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் குறித்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
ரஞ்சன் கோகாய், இதுவரை நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை, ஒரு விவாதத்தில் கூட பங்கேற்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
அயோத்தி வழக்கு:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமையை, கோயில் அறக்கட்டளைக்கு வழங்கி, 2019-ல் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் ஒரே மாதிரியான தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் வழங்கினர். அந்த அரசியல் சாசன அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகளுக்கு, ஓய்வுக்கு பின்னர் அரசாங்க பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் நசீர் நிகழ்வைத் தொடர்ந்து, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் குறித்து பலரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
அதில், 2021 இல் ஓய்வு பெற்ற நீதிபதி அசோக் பூஷண், 2021 நவம்பரில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கோகாய், மார்ச் 2020 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி நசீர் ஓய்வு பெற்று 40 நாட்களுக்குப் பிறகு தற்போது ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது போன்று நீதிபதிகள் ஓய்வுக்கு பின்னர், அரசு பதவிகள் வழங்குவது நீதித்துறையின் சுதந்திரத்தையும் தீர்ப்பையும் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
29 சதவீதம் மட்டுமே வருகை:
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதி கோகோயின் குறித்த செயல்பாடுகள் வெளியாகியுள்ளது. அதில், அவரின் நாடாளுமன்றத்தின், செயல்பாடு சிறப்பானதாக இல்லை. மூன்று ஆண்டுகளில் சராசரியாக 29 சதவீதம் மட்டுமே வருகை புரிந்துள்ளார்.
மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டது குறித்து கோகோய் தெரிவித்த போது, "சட்டமன்றமும் நீதித்துறையும் தேசத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையின் காரணமாக மாநிலங்களவை நியமனத்தை ஏற்றுக்கொண்டேன். நாடாளுமன்றத்தில் நீதித்துறையின் கருத்துக்களை முன்வைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்” என்றார்
ஆனால், அவர் நியமிக்கப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டுகள், எட்டு மாநிலங்களவை அமர்வுகளில், ராஜ்ய சபாவில் ஒரு கேள்வியைக் கூட கேட்கவில்லை, எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை, எந்த ஒரு தனிநபர் மசோதாவையும் முன் வைக்கவில்லை என்று நாடாளுமன்ற பதிவுகள் தெரிவிக்கின்றன.
சொன்னது ஒரு மாதிரி - செயல்பாடுகள் வேறு மாதிரி:
இந்நிலையில், முன்னாள் தலைமை நீதிபதி செயல்பாடுகளை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் சொன்னது ஒரு மாதிரி உள்ளது, செயல்பாடுகள் வேறு மாதிரி உள்ளது என விமர்சனம் வைத்து வருகின்றனர்.
அயோத்தி வழக்கில் நீதிபதியாக இருந்து, சமீபத்தில் ஆந்திர மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள அப்துல் நசீர் நிகழ்வை அடுத்து பலரும் அயோத்தி வழக்கில் நீதிபதிகளாக இருந்து, அரசு பதவி பெற்றவர்கள் குறித்து ஆராய ஆரம்பித்துள்ளனர்.