Crime: அப்பா, அம்மா என்னை மன்னிச்சிடுங்க.. தேர்வு பயத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை
கடந்த ஜனவரி 23-ம் தேதி நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் அடுத்த கோட்டாவில் மேலும் ஒரு மாணவி ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் கோட்டாவில் இன்று அதிகாலை 18 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜே.இ.இ மெயின் தேர்வானது வருகின்ற ஜனவரி 31-ம்தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த அந்த மாணவி, படிக்கும்போது ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொள்வதற்கு அந்த மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் “ அம்மா, அப்பா என்னால் ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு படிக்க முடியவில்லை, அதனால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன். மன்னிக்கவும் அம்மா, அப்பா. வேறு வழி தெரியவில்லை. இதுதான் என்னுடைய கடைசி வாய்ப்பு” என எழுதியிருந்தார்.
இதுகுறித்து இறந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்ததாவது, “தற்கொலை செய்துகொண்ட எங்களது உறவுக்கார பெண் படிப்பில் மிகவும் புத்திசாலி. தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன் மனமுடைந்த அவர், கோட்டாவில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.” என தெரிவித்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை துவக்கியுள்ளனர். விசாரணையில், இறந்தவரின் அறையில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் டிஎஸ்பி சிங் கூறுகையில், இறந்த பெண் கடந்த ஆண்டு தனது 12ம் வகுப்பை முடித்தார். ஆனால், அந்த தேர்வில் அவரால் நல்ல மதிப்பெண் எடுக்கவில்லை. எனவே ஜே.இ.இ தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்தநிலையில், தேர்வில் தேர்ச்சி ஆகிவிடுவோமா என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண் தங்கியிருந்த அறை நீண்ட நேரம் திறக்காததால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலம் குடும்ப உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது” என்றார்.
தொடரும் தற்கொலை:
முன்னதாக கடந்த ஜனவரி 23-ம் தேதி நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இறந்தவரின் பெயர் முகமது ஜைத், அவர் உ.பி., மொராதாபாத்தில் வசிப்பவர். முகமது ஜெய்த் தனியார் பயிற்சியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இறந்த முகமது ஜைத்தின் தற்கொலைக் குறிப்பு எதுவும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை.
2023-ம் ஆண்டு மட்டும் 29 மாணவர்கள் தற்கொலை:
கல்வி நகரம் என்று அழைக்கப்படும் கோட்டாவில் மனஅழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோல சம்பவங்கள் எதிர் காலத்தில் நடக்காமல் இருக்க, இதைத் தடுக்க, உள்ளாட்சி நிர்வாகம் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. இருப்பினும் கடந்த 2023 ஆம் ஆண்டில், 29 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
தற்கொலை தீர்வாகாது:
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050