Rahul Gandhi Yatra : யாத்திரையின்போது அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறாரா ராகுல் காந்தி?
யாத்திரையின்போது அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல திட்டமுள்ளதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
உத்தர பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
மதகுருமார்களை தவிர 10,000 சிறப்பு விருந்தினர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:
ஆனால், அயோத்தி கோயில் விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க. நீண்ட காலமாக அரசியலாக்கி வருவதாக குற்றம் சுமத்திய காங்கிரஸ், ஆர்எஸ்எஸ்/பாஜக விழாவில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இதற்கு பாஜக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சிக்கு வன்மம் இருப்பதாகவும் அக்கட்சி கடவுளை எதிர்ப்பதாகவும் சாடியுள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ராகுல் காந்தி, இதுகுறித்து முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார். இந்திய ஒற்றுமை நீதி பயணத்திற்கு மத்தியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற ராகுல் காந்தி, "பிரதமர் நரேந்திர மோடியும் ஆர்எஸ்எஸ்ஸும் இந்த நிகழ்வை அபகரித்தது மட்டும் இல்லாமல் தேர்தல் விழாவாக மாற்றியுள்ளது" என குற்றம் சுமத்தினார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ சுற்றி ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள கோயில் கும்பாபிஷேகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு தேர்தலும் அரசியலுமே காரணம். இந்து மதத்தின் மிகப்பெரிய அமைப்புகள் கூட விழாவைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி தங்கள் பார்வையை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
யாத்திரையின்போது அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறாரா ராகுல் காந்தி?
மத நம்பிக்கைகளை வெளிப்படையாக காட்டி கொள்ள வேண்டும் என அவசியமில்லை. ராமர் கோயிலுக்குச் செல்ல விரும்புவோர். செல்லலாம். அவர்கள் மிகவும் வரவேற்கத்தக்கவர்கள் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்" என்றார்.
வரும் ஜனவரி 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்வீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "உண்மையில் எனக்கு தெரியாது. பயண திட்டத்தை பார்த்துதான் சொல்ல முடியும். யாத்திரை செல்லும் வழியில் எங்காவது இருப்பேன். அஸ்ஸாமில் இருப்போம் என்று நினைக்கிறேன்" என்றார்.
கோயில் விழாவை புறக்கணித்திருப்பதன் மூலம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என விமர்சனம் வைக்கப்படுகிறதே என கேட்கப்பட்டதற்கு, "உண்மையை சொல்ல வேண்டுமானால், மதத்தை நம்புபவர்கள் மதத்துடனான தங்கள் உறவை தனிப்பட்ட முறையில் வைத்திருப்பார்கள். மதத்தைப் பயன்படுத்துவதில்லை என்பது என் எண்ணம்" என்றார்.