நிறுத்திவைக்கப்பட்ட தண்டனை.. நாடாளுமன்றம் செல்வாரா ராகுல் காந்தி..?
ராகுல்காந்தி மீது குஜராத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டதில் உற்சாகத்தில் இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
ராகுல்காந்தி மீது குஜராத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டதில் உற்சாகத்தில் இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல்காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய்து. அந்த பேச்சைக் கண்டித்து குஜராத் நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்த குஜராத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து நாடாளுமன்ற விதிகள் காரணமாக ராகுல்காந்தியின் பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராகுல்காந்தி. இந்த வழக்கில் தான் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராகுல்காதி மீதான இரண்டு வருட சிறை தண்டனை உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். இதனால் ராகுல்காந்தி மீண்டும் எம்பியாக தொடர்வார்.
மழைக்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும்போது உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் இந்த தீர்ப்பு காங்கிரஸ் கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 37 மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக முடிவு செய்திருந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர் அமளி காரணமாக விவாதங்கள் ஏதும் நடைபெறாமல் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டுமே தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் ஜூலை 26-ஆம் தேதி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று விவாதத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதுமுதலே பற்றியெரிந்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஒருநாள் கூட கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதே போல பாஜகவினரும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளமளிப்பதை விரும்பவில்லை. சபாநாயகர் ஜக்தீப் தங்கர் கூட பிரதமர் மோடியை அவைக்கு வந்து விளக்கமளிக்குமாறு உத்தரவிட முடியாது என்று கூறியிருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகளின் வாதங்களுக்கு பிரதமர் மோடி ஆகஸ்ட் 10-ஆம் தேதி பதிலளிப்பார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் விளக்கமளிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் வருகிறார் ராகுல்காந்தி. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ராகுல்காந்தி கடுமையாக பேசி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி் என்ன பேசுவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முதலில் அவர் நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாடாளுமன்ற செயலகத்திடம் சமர்ப்பித்து ராகுல்காந்தியை மீண்டும் எம்பியாக நியமிக்கும் கோரிக்கைக்கான மனுவையும் சமர்ப்பித்துவிட்டார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு திங்கள் கிழமை அல்லது செவ்வாய் கிழமை காலைக்குள் ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட வேண்டும். அப்படி அங்கீகரிக்கப்பட்டல் மட்டுமே ராகுல்காந்தியால் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும். ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைந்தண்டனை விதித்து தீர்ப்பளித்த சிறிது நேரத்திலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது நடாளுமன்ற விவகாரங்கள் துறை. ஆனால், உடனடியாக அவரை எம்பியாக சேர்த்துக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனெனில், ஏற்கனவே லட்சத்தீவு காங்கிரஸ் எம்பி முகமது ஃபைஸல் வழக்கில் இதுபோன்று நடந்துள்ளது தான். கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் அந்த தீர்ப்பினை கேரள உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறுத்தி வைத்தது. இதனையடுத்து தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும்படி மனு அளித்தார் முகமது ஃபைஸல். ஆனால் 2 மாதங்கள் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வருவதற்கு இரண்டு நாள் முன்னதாக மார்ச் மாதத்தில் தான் நாடாளுமன்ற உறுப்பினாராக மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இப்படியான சூழ்நிலையில், ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை ராகுல்காந்தி அனுமதிக்கப்படவில்லையென்றாலும் ராகுல்காந்தி மீது பாஜகவிற்கு பயம் அதனால் தான் அவரை அனுமதிக்கவில்லை என்ற கோணத்திலும் பரப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.