Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், தங்களின் எந்த கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவரது பேட்டி குறித்து பார்க்கலாம்.

தேர்தல் சீர்திருத்தம் குறித்த இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்து பேசினார். எதிர்க்கட்சிகள் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், கேள்விகளுக்கும் அவர் நீண்ட விளக்கம் அளித்தார். மேலும், அவரது விளக்க உரையின்போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பல்வேறு கேள்விகளுக்கு, அமித் ஷா ஆவேசத்துடன் பதில் அளித்தார். இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டம் முடிந்து பேட்டியளித்த ராகுல் காந்தி, தங்களின் எந்த கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். அவரது பேட்டியின் முழு விவரத்தை காணலாம்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
இன்று தேர்தல் சீர்திருத்தம் குறித்து விளக்கமளித்து அவையில் அமித்ஷா தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்த நிலையில், எதிர்க்கட்சி எம்பி-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது, அவர்களை நோக்கி குரல் கொடுத்த ஆளும்கட்சி எம்பி-க்கள், உள்துறை அமைச்சரின் பதிலை கேட்காமல் சென்றால் எப்படி எனவும் கேள்வி எழுப்பினர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் எம்பி-க்களும் அவையில் இருந்து வெளியே சென்றனர்.
கேள்விகளுக்கு பதில் இல்லை - ராகுல் காந்தி பேட்டி
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த ராகுல் காந்தியிடம், அவையில் நடைபெற்ற SIR விவாதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், எஸ்ஐஆர் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அளித்த பதில், பீதியடைந்த தற்காப்பு பதிலாகத் தான் இருந்தது என்று கூறினார்.
மேலும், டிஜிட்டல் முறையில், படிக்கக் கூடிய வகையில் வெளிப்படையான வாக்காளர்கள் பட்டியல்களை வெளியிட வேண்டும் என்று தான் கேட்டதாகவும், ஆனால் அது பற்றி ஒரு வார்த்தை கூட பதில் அளிக்கப்படவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தாங்கள் கேட்ட கேள்விகளில் ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் கிடைத்ததாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கட்டமைப்பு என்ன என்பதை அனைவருக்கும் கொடுங்கள் என்று தான் கேட்டதாகவும், அதற்கும் பதில் இல்லை என்றும் அவர் கூறினார்.
அதோடு, தனது நிருபர்கள் சந்திப்பில் அனைத்து ஆதாரங்களும் உள்ளதாகவும், அவையில் அதை பற்றி எதையுமே பேசவில்லை என்றும் கூறிய ராகுல், பல மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஓட்டுக்களை வைத்திருப்பது மற்றும் ஓட்டு போடுவது குறித்து எந்த பதிலும் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
தேர்வு நடைமுறையில் இருந்து தலைமை நீதிபதியை நீக்குவது குறித்தும் எந்த பதிலும் இல்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு விதிவிலக்கு வழங்குவது குறித்து அமித் ஷா அபத்தமான பதிலை கூறியதாகவும் ராகுல் விமர்சித்தார். மேலும், சிசிடிவி காட்சிகளை வழங்காததற்கான சாக்குப்போக்கும் மிகவும் அபத்தமானது என்று கூறிய அவர், தான் மீண்டும் ஒருமுறை சொல்வது, ஓட்டு திருட்டு மிகப்பெரிய துரோகம் என்பதுதான் என்றும் தெரிவித்தார்.





















