(Source: ECI/ABP News/ABP Majha)
Rahul Gandhi Vs Modi : ஒரு இன்ச் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லையா? பிரதமர் மோடி சொன்ன பொய் ..வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி
பாங்காங் ஏரியின் கரையில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு ராகுல் காந்தி இன்று மரியாதை செலுத்தினார்.
நாட்டின் முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் 79ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பைக்கில் சென்றார். ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
லடாக்கிற்கு சென்ற ராகுல் காந்தி:
பாங்காங் ஏரியின் கரையில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவின் ஒரு இன்ச் நிலத்தை கூட சீன ராணுவம் ஆக்கிரமிக்கவில்லை என மத்திய அரசு சொல்வது உண்மையல்ல" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தங்களின் நிலத்தை சீனா கைப்பற்றுவது குறித்து உள்ளூர்வாசிகள் கவலைப்படுகிறார்கள். தங்களது மேய்ச்சல் நிலத்தை சீனப் படையினர் அபகரித்ததாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒரு அங்குல நிலம் கூட பறிக்கப்படவில்லை என்று பிரதமர் கூறுகிறார். இது உண்மையல்ல. இங்கு யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள்" என்றார்.
"ஒரு இன்ச் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லையா?"
லடாக்கிற்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, "லடாக் மக்களிடமிருந்து பல புகார்கள் வந்திருக்கின்றன. அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தில் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் அதிக பிரதிநிதித்துவத்தை விரும்புகிறார்கள்.
மேலும், வேலையில்லா திண்டாட்டம் அவர்களை கவலை அடைய செய்துள்ளது. அரசு அதிகாரவர்க்கத்தால் நடத்தப்படாமல், மக்கள் பிரதிநிதிகளால் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்" என்றார்.
தந்தையுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி:
தனது தந்தை ராஜீவ் காந்தியுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர், "எனக்கு நினைவிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது, என் தந்தை ஒருமுறை பாங்காங் சோவுக்குச் சென்று திரும்பி வந்து ஏரியின் சில படங்களைக் காட்டினார். இது பூமியின் மிக அழகான இடம் என்று அவர் என்னிடம் கூறினார்.
பாரத் ஜோடோ யாத்ராவின் போது, நான் லடாக்கிற்கு வரத் திட்டமிடப்பட்டிருந்தேன். ஆனால், போக்குவரத்து பிரச்னை காரணங்களால், பயணம் கைவிடப்பட்டது. எனவே, நான் பின்னர் வந்து இங்கு தங்கலாம் என்று நினைத்தேன். நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் கார்கில் ஆகிய இடங்களுக்கும் செல்ல உள்ளேன்" என்றார்.
அவரது பயணத்தின் போது, ராகுல் காந்தியுடன் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் விகார் ரசூல் வானி மற்றும் பல கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிக்க: Rajini Akhilesh Yadav: கல்லூரியில் படிக்கும்போது ரஜினியை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் அப்படியே இருக்கு ..அகிலேஷ் யாதவ் நெகிழ்ச்சி