(Source: ECI/ABP News/ABP Majha)
"மணிப்பூர், மணிப்பூராவே இல்ல! எங்க பார்த்தாலும் வெறுப்பு" யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி
மணிப்பூர் மாநிலம் தௌபாலில் இருந்து இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை தொடங்கி உள்ளார் ராகுல் காந்தி.
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளது காங்கிரஸ். அதன்படி, இன்று மணிப்பூரில் யாத்திரையை தொடங்கியுள்ளார் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. மணிப்பூரில் தொடங்கி மும்பை வரை அதாவது 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி யாத்திரை 2.0:
இந்த யாத்திரைக்கு பாரத் ஜோடோ நியாய யாத்திரை ( இந்திய ஒற்றுமை நீதி பயணம்) என பெயரிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடந்த இனக்கலவரத்தாலும் அதைத்தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட அதே மணிப்பூரில் இருந்து ராகுல் காந்தி யாத்திரையை தொடங்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
தௌபாலில் யாத்திரையை தொடங்கி வைத்து பேசிய ராகுல் காந்தி, "நான் 2004 ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருக்கிறேன். இந்தியாவில் முதல் முறையாக அரசு இயந்திரம் முற்றிலும் நிலைகுலைந்த இடத்திற்கு வந்துள்ளேன். கடந்தாண்டு ஜூன் 29ஆம் தேதிக்குப் பிறகு, மணிப்பூர், மணிப்பூராக இல்லை. அது பிளவுபட்டுள்ளது. எல்லா இடங்களிலும் வெறுப்பு பரவியுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் இழப்பை சந்தித்தனர். மக்கள் கண்ணெதிரே தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர். மேலும், இதுவரை இந்தியப் பிரதமர் உங்கள் கண்ணீரைத் துடைக்கவும், கையைப் பிடிக்கவும் இங்கு வரவில்லை. இது வெட்கக்கேடான விஷயம். மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நினைக்கவில்லை.
"ஆர்எஸ்எஸ் வெறுப்பின் சின்னமாக உள்ள மணிப்பூர்"
பாஜகவின் அரசியல் சின்னமாக உள்ளது மணிப்பூர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வெறுப்பின் சின்னமாக உள்ளது மணிப்பூர். பாஜகவின் கண்ணோட்டம் மற்றும் சித்தாந்தத்தின் சின்னமாக மணிப்பூர் உள்ளது. நீங்கள் (மக்கள்) மதிப்புமிக்கதாக நினைத்ததை இழந்துவிட்டீர்கள். ஆனால், நீங்கள் மதிப்பிட்டதை மீண்டும் ஒருமுறை கண்டுபிடித்து உங்களிடம் கொண்டு வருவோம். மணிப்பூர் மக்கள் அனுபவித்த வேதனை எங்களுக்குப் புரிகிறது. நீங்கள் அடைந்த காயம், இழப்பு மற்றும் சோகத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நீங்கள் மதிப்புமிக்கதாக நினைத்ததை மீண்டும் கொண்டு வருவோம். நல்லிணக்கம், அமைதி, அன்பு ஆகியவற்றை மீண்டும் கொண்டு வருவோம் என்றும் உறுதியளிக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "மணிப்பூருக்கு பிரதமர் மோடி வாக்கு கேட்க வருகிறார். ஆனால், மணிப்பூர் மக்கள் பிரச்னையில் இருக்கும்போது அவர் முகத்தைக் காட்டவில்லை. கடலில் சுற்றித் திரிகிறார். உட்கார்ந்து 'ராம் ராம்' என்று கோஷமிடுகிறார். இதை மக்களிடம் செய்யாதீர்கள். எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ஓட்டுக்காக இதைச் செய்யாதீர்கள். மக்களைத் தூண்டிவிட இவர்கள் (பாஜக) மதத்தைக் கலக்கிறார்கள்" என்றார்.
மணிப்பூரில் தொடங்கப்பட்டுள்ள யாத்திரை நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.