"நாங்க உங்கள கட்டிப்பிடிக்கிறோம்.. ஆனா, பாஜகவினர் உங்க மேல சிறுநீர் கழிக்கிறாங்க" - ராகுல் காந்தி
பழங்கடியினர் அதிகம் வாழும் சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக, ஐந்து மாநில தேர்தல் நேற்றுடன் (நவம்பர் 7ஆம் தேதி) தொடங்கியது. மிசோரத்தில் மொத்தமாக உள்ள 40 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது.
சத்தீஸ்கரை பொறுத்தவரையில், பாஜக செல்வாக்கு செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. அந்த மாநிலம் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்ட முதல் மூன்று தேர்தலிலும் பாஜகவே ஆட்சி அமைத்தது. இச்சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், காங்கிரஸ் பெரிய வெற்றியை பதிவு செய்து, ஆட்சி அமைத்தது.
பாஜகவை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி:
பழங்கடியினர் அதிகம் வாழும் சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதற்காக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அங்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அம்பிகாபூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக சாடினார்.
மத்திய பிரதேசத்தில் உள்ளூர் பாஜக நிர்வாகி ஒருவர், பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் கழித்த சம்பவத்தை மேற்கோள் காட்டி பேசிய ராகுல் காந்தி, "பழங்குடியினரை காங்கிரஸ் அரவணைத்து கொள்கிறது. ஆனால், பாஜகவோ அவர்கள் மீது சிறுநீரை கழிக்கிறது. பாஜக தலைவர்கள் உங்கள் மீது சிறுநீர் கழிக்கிறார்கள். அதை முழு நாடும் பார்க்கும் வகையில் வீடியோக்களாக்கி வைரலாக்குகிறார்கள்" என்றார்.
"ஆதிவாசி என்பது புரட்சிகரமான வார்த்தை"
முன்னதாக, மற்றொரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை 'ஆதிவாசி' என்பதற்குப் பதிலாக 'வனவாசி' என பாஜக தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.
'ஆதிவாசி' என்பது புரட்சிகரமான வார்த்தை. 'ஆதிவாசி' என்றால் நாட்டின் முதன்மையான சொந்தக்காரர்கள் என்று பொருள். இந்த வார்த்தையை பயன்படுத்தினால் காடு, தண்ணீர், நிலம் என அனைத்தையும் உங்களிடமே திருப்பித் தர வேண்டியிருக்கும் என்று பாஜகவினருக்குத் தெரியும். எனவே, அந்த வார்த்தையை பயன்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் பேசிய பிரதமர் மோடி, "நமது பழங்குடி குடும்பங்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். மகள்கள் எங்கே போனார்கள் என்பதற்கு காங்கிரஸ் தலைவர்களிடம் பதில் இல்லை.
இங்கு, சட்ட விரோதமாக ஊடுருவும் நபர்களை, ஓட்டுக்காக, காங்கிரசார் ஊக்குவிக்கின்றனர். பழங்குடியினரின் நிலம் பறிக்கப்படுகிறது. காங்கிரஸின் கொள்கையால், பண்டிகைகளைக் கொண்டாடுவது கூட கடினமாகிவிட்டது. எனது ஆட்சிக் காலத்தில் பல வேலைகள் நடந்துள்ளது. 50 முதல் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் அதை செய்யத் தவறிவிட்டது" என்றார்.