ரஃபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகருக்கு பெருந்தொகை சென்றதாக பிரான்ஸ் செய்தி நிறுவனம் அறிக்கை
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் இடைத்தரகர் ஒருவருக்கு ஒரு மில்லியன் யூரோ தொகையை அன்பளிப்பாக வழங்கியதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இந்திய விமானப் படைக்கு 36 போர் விமானங்களை 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக பிரெஞ்சு நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் இடைத்தரகர் ஒருவருக்கு ஒரு மில்லியன் யூரோ தொகையை அன்பளிப்பாக வழங்கியதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீடியாபார்ட் (Mediapart) என்ற செய்தி நிறுவனம் மேற்கொண்ட புலன் விசாரணையில், " செப்டம்பர் 23, 2016 அன்று ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு, டஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவில் உள்ள அதன் துணை ஒப்பந்தக்கார நிறுவனங்களில் ஒன்றான Defsys Solutions (டெஃப்சிஸ் சொல்யூஷன்ஸ்)- க்கு பெருந்தொகையை அளிக்க ஒப்புக் கொண்டது. 2018 அக்டோபர் மாத நடுப்பகுதியில், பிரெஞ்சு ஊழல் தடுப்பு முகமை இந்த பணப் பரிமாற்றத்தைக் கண்டறிந்து, டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.
ரஃபேல் போர் விமானங்களின் 50 பிரதி மாதிரிகளை தயாரிக்கும் பொருத்து பணம் செலுத்தப்பட்டதாக டஸ்ஸால்ட் நிறுவனம் தனது பதிலில் தெரிவித்ததாகவும், ஆனால், அதற்கான ஆதராங்களை நிறுவனத்தால் சமர்பிக்க முடியவில்லை என்று மீடியாபார்ட் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
நீதி அமைச்சகத்துக்கும், ஒன்றிய அரசின் பட்ஜெட் துறை அமைச்சகத்துக்கும் டசால்ட் நிறுவனத்தின் இந்த முறையற்ற செயல்பாடுகளை கொண்டு செல்ல அந்நாட்டு ஊழல் தடுப்பு முகமை தவறவிட்டதாகவும் மீடியாபார்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பெருந்தொகை செலுத்தப்பட்டதாக கூறப்படும் டெஃப்சிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத் தலைவர் சுஷென் குப்தாவை, 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் மோசடி தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Breaking!
— Prashant Bhushan (@pbhushan1) April 5, 2021
"Sale of French Rafale jet fighters to India: How a state scandal was buried: Mediapart can reveal that, along this deal, Dassault also agreed to pay 1M Euros to a middleman who is under investigation in India in connection with another Def deal"https://t.co/REZ8IIulpB
தனது சொந்த விமான மாதிரிகளை 20,000 ( 50 மாதிரிகள்) யூரோ மதிப்பில் தயாரிக்க ஒரு இந்திய நிறுவனத்தை நாடியது ஏன்? போன்ற கேள்விகளுக்கு டஸ்ஸால்ட் நிறுவனம் முறையாக பதில் அளிக்கவில்லை. மாதிரிகள் எப்போதுமே தயாரிக்கப்பட்டன என்பதை நிரூபிக்க ஒரு புகைப்படத்தை கூட நிறுவனத்தால் காட்ட முடியவில்லை என்றும் மீடியாபார்ட் தனது கட்டுரையில் தெரிவித்தது.
Let the PM answer:
— Congress (@INCIndia) April 5, 2021
1- Was the payment of €1.1 Million shown by Dassault as ‘Gifts to Clients’ in reality a commission paid to the middleman for the Rafale Deal?: Shri @rssurjewala#RafaleScam pic.twitter.com/ZTurbLA1ni
ரஃபேல் பிண்ணனி :
ஜனவரி 31 ,2012ம் ஆண்டில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது என்றும். இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. இதன்படி ஹெச்ஏஎல் – டஸ்ஸால்ட் இரு நிறுவனங்கள் இடையேயான வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது. பின்பு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் தலைமை அமைச்சர் மோடி அவர்கள் முன்பு எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக அறிவித்து, 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர் முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதிய ஒப்பந்தத்தின் கீழ், இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல்- க்குப் பதிலாக எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் சேர்க்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு , " ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை இந்தியக் கூட்டாளியாகத் தேர்வுசெய்ததில் முறைகேடு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.