முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் அறியப்படாத மறுமுகம்....!
நரசிம்மராவ் பற்றி வினய் சீதாபதி ‘Half Lion’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியிருக்கிறார்.
இந்தியாவின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு 500 பில்லியன் டாலருக்கு மேல். ஆனால், 1991ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்கும் சமயத்தில் 3 வாரங்களுக்குத் தேவையான தொகை மட்டுமே இருந்தது. சிரிக்கமாட்டார், அதிகம் பேசமாட்டார், உற்சாகமாக இருக்கமாட்டார் யாருடனும் பேச மாட்டார் இதுபோன்ற பிம்பங்கள்தான் நரசிம்ம ராவ் பற்றி இதுவரை நாம் கட்டமைத்துக் கொண்ட அல்லது கட்டமைத்துத் தரப்பட்ட பிம்பங்கள். எதிர்மறையான பிம்பங்கள். ஆனால், வினய் சீதாபதியின் உரைக்குப் பிறகு நரசிம்ம ராவ் குறித்த பிம்பம் வேறு உரு கொண்டது.
1991 ஜூன் 21ம் தேதி நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால் அதற்கு சரியாக ஒரு மாதம் முன்புதான் அவர் டெல்லியிலிருந்து தனது முகாமைக் காலிசெய்திருந்தார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படும் சமயத்தில் குற்றாலத்தில் இருந்திருக்கிறார். இனி அரசியல் தேவையில்லை என்று முடிவெடுத்து, ஏறக்குறைய அதிலிருந்து ஒதுங்கிவிட்டிருந்தார். ராஜீவ்காந்தி இறந்தபிறகு (மே 21, 1991) மீண்டும் அரசியலில் அவருக்கான இடம் காத்திருந்தது. மீண்டும் டெல்லி திரும்பினார். ராஜீவ் காந்தி இறந்த அனுதாப நிலையிலும், காங்கிரஸ் கட்சிக்கு, அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், சரியாக ஒரு மாதத்துக்கு பிறகு இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார்..
ராவ் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவர்?
நரசிம்மராவ் அளவுக்கு நெருக்கடிகளைச் சந்தித்தவர்கள் யாரும் கிடையாது. ராஜீவ் படுகொலை, இந்தியாவின் அந்நிய செலாவணி சிக்கல், சோவியத் யூனியன் உடைந்து சிதறியது என சிக்கல்களுக்கு மேல் சிக்கல். தவிர கட்சிக்குள் பல எதிர்கோஷ்டிகள். அர்ஜுன் சிங், என்.டி.திவாரி, நட்வர் சிங் உள்ளிட்ட பெருந்தலைகளைச் சமாளித்தாக வேண்டும். நாடாளுமன்றத்திலும் போதிய பலமில்லை. இந்தச் சிக்கல்களை எதிர்கொண்டாக வேண்டும். பொதுமக்களின் ஆதரவோ, கட்சியில் செல்வாக்கோ, பெரிய அளவுக்கு அதிகாரமோ இல்லாத நரசிம்மராவ், ஐந்தாண்டுகள் பிரதமராக இருந்து பல விஷயங்களை சாதித்திருக்கிறார். நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் இந்தியாவை முழுமையாக 5 ஆண்டுகள் ஆண்டு விட முடியும் என்பதே ஒரு தனி சாதனைதான்.
91-க்கு முன்பான இரு ஆட்சிகளும், 5 ஆண்டுகளை முழுமை செய்ய முடியவில்லை; குறைந்த காலம் மட்டுமே நீடித்தன. அதேபோல 96-க்கும் பிறகு இரு ஆட்சிகள் குறைந்த காலத்திலே கவிழ்ந்தன. இந்தச் சூழலுடன் ஒப்பிட்டுபார்த்தால் தெரியும், அவர் ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்த்து எவ்வளவு அசாத்தியமான ஒன்று என்பது. அப்படிப்பட்ட நிலையிலும் அவர் செய்த சாதனைகள் வியக்கத்தக்கவை.
எப்போது வெற்றிபெற வேண்டும், எப்போது பின்வாங்க வேண்டும், எப்போது ஏமாற்றவேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பதாலே அவரால் ஐந்தாண்டு காலம் பதவியில் நீடிக்க முடிந்ததாக வினய் சீதாபதி கூறுகிறார். தவிர, நரசிம்மராவின் அனுபவம், அவரின் மிகப்பெரிய பலம். 1976-ஆம் முதல் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்திருக்கிறார். மாநில முதலமைச்சர், மத்திய அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகள் என பரந்துபட்ட அனுபவம், நெட்வொர்க்கும் அவரது அரசியல் வெற்றியில் பெரும் பங்கு வகித்தன.
இவருக்கு நண்பர்கள் என யாரும் கிடையாது. அதனாலே எதிரிகளும் மிகக் குறைவு. முதல்வர், பிரதமர் என முக்கிய பொறுப்புகள் வகிக்க இதுவும் ஒரு காரணம். அர்ஜுன் சிங், சரத் பவார், என்.டி.திவாரி போன்றவர்களுக்கு பெரிய அளவில் திட்டங்கள், லட்சியங்கள் இருந்தன. ஆனால் நரசிம்மராவிடம் திட்டங்கள் லட்சியங்கள் ஏதும் இல்லாதது போலத் தோன்றும். இந்த மாயத்தோற்றமும் அவருக்குச் சாதகமாக அமைந்தது.
யார் நிதி அமைச்சர்?
ஜூன் 18ஆம் தேதி (1991) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 20ஆம் தேதி நரசிம்மராவ் பிரதமராக முன்னிறுத்தப்படுகிறார். இந்த சமயத்தில் கேபினட் செயலாளர் நரேஷ் சந்திரா, நாட்டின் நிதி நிலைமை குறித்த எட்டு பக்க குறிப்பை நரசிம்மராவிடம் சமர்ப்பிக்கிறார். அதில் நாட்டின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது, ஐஎம்எஃப் என்ன எதிர்பார்க்கிறது என்பது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு வரை protectionist ஆக இருந்த நரசிம்மராவ், சீர்த்த்திருத்தங்கள் தேவை என்பதை முடிவு செய்கிறார். நிதித் துறையில் சிறந்த அனுபவமிக்கவர்தான் நிதியமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என முடிவெடுக்கப்படுகிறது. கட்சியிலிருந்து யாரையும் தெரிவு செய்யவில்லை.
லண்டன் ஸ்கூல் ஆப் பிஸினஸின் இயக்குநரான ஐஜி படேலிடம் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து மன்மோகன் சிங் பெயர் பரிசீலனைக்கு வந்த்து. மன்மோகன் சிங் அப்போது வெளிநாடுகளில் இருந்து திரும்பியதால் அவரிடம் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. அடுத்தநாள் அதாவது 21ம் தேதி காலை நரசிம்மராவ் நேரடியாக மன்மோகன் சிங்கிடம் பேசி, நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்னும் விருப்பத்தை தெரிவிக்க, அடுத்த சில மணிநேரங்களில் மன்மோகன் சிங் பொறுப்பேற்கிறார். அப்போது நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் மற்றவர்கள் எல்லாம் துறை ஒதுக்கப்படாத அமைச்சர்களாக மட்டுமே பொறுப்பேற்றனர். அவர்களுக்கான துறைகள் பிறகு ஒதுக்கீடு செய்யப்பட்டன. மன்மோகன் சிங்தான் நிதியமைச்சராக செயல்படுவார் என்பது உடனே அறிவிக்கப்பட்டது.
சாதித்தது என்ன?
Balance of Payments பிரச்சினைகள் இருந்ததால் தாராளயமாக்கல் கொண்டுவரப்பட்டது. 91-க்கு முன்பாகவே இதற்கான திட்டம் தீட்டப்பட்டாலும் எந்த அரசுகளாலும் செயல்படுத்த முடியவில்லை. 91இல் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றாலும் கடும் எதிர்ப்புகள் இருந்தன. எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே எதிர்ப்புகள் இருந்தன. தவிர தொழில்துறையினரும் தங்கள் பங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தாராளமயமாக்கலை அறிமுகம் செய்வதற்குப் பதிலாக பொதுத் துறை நிறுவனங்களை விற்கலாம் என திருபாய் அம்பானி கடிதம் எழுதி இருக்கிறார். இவ்வளவு எதிர்ப்பையும் மீறி சீர்த்திருத்தங்கள் நடைபெற்றன.
1991ஆம் ஆண்டுக்கு முன்பு Fixed Exchange Rate முறையை இந்தியா பின்பற்றி வந்தது. இந்த முறையை மாற்ற வேண்டும் என்றால் ரூபாய் மதிப்பைக் குறைக்க வேண்டும் என மன்மோகன் முடிவு செய்தார். ஜூலை 1ஆம் தேதி ரூபாய் மதிப்பு 9 சதவீதம் குறைக்கப்படுகிறது. ஜூலை 3ஆம் தேதி மேலும் 11 சதவீதம் வரை ரூபாய் மதிப்பு குறைக்கப்படுகிறது.
இரு கட்டங்களாக இந்த நடவடிக்கையை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்படுகிறது. ஆனால் ஜூலை 2ஆம் தேதி எதிர்ப்புக் கிளம்பவே, இரண்டாம் கட்ட நடவடிக்கையை தடுத்த நிறுத்த நரசிம்மராவ் முயற்சி செய்கிறார். ஆனால் இரண்டாம் கட்ட நடவடிக்கை ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது, திரும்பப் பெறமுடியாது என அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் மறுத்துவிடுகிறார்.
ஓர் ஆண்டுக்குள் அந்நிய செலாவணி இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. இதன் பிறகு மேலும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 1969 மற்றும் 1980களில் தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. நரசிம்மராவ் காலத்தில், தனியார் வங்கிகளுக்கான அனுமதி மீண்டும் வழங்கப்படுகிறது. தொலைத்தொடர்புக் கொள்கை, உற்பத்தித் துறை வளர்ச்சி, சாட்டிலைட் டிவி உள்ளிட்ட பல விஷயங்கள் இந்தியாவுக்கு அறிமுகமாகின.
நரசிம்மராவ் தவறே செய்யவில்லையா.?
1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தவறாக கையாளப்பட்டது. அதேபோல சீக்கியர் மீதான் தாக்குல் நடந்த சமயத்தில் நரசிம்மராவ் உள் துறைக்கு பொறுப்பு வகித்து வந்தார். இதுவும் தவறாக கையாளப்பட்டது. அதேபோல கடைசி இரு ஆண்டு காலத்தில் பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டுவரவில்லை. உதாரணத்துக்கு காப்பீட்டு துறை மீதான சீர்த்திருத்தம். ஓரிரு நாட்களில் அமலுக்கு வந்துவிடும் என்ற சூழலில், அரசியல் காரணங்களுக்காக நரசிம்மராவ் தடுத்துவிட்டார்.
இது மீண்டும் அமலுக்கு வர பல ஆண்டுகள் ஆயின. அதேபோல தனிப்பட்ட முறையிலும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஆனால், இக்குற்றச்சாட்டுகளால், நரசிம்மராவின் அசாத்திய சாதனைகளை மறைத்துவிட முடியாது. `சிரிக்கவே தெரியாதவர்கள் எல்லாம் அகில இந்திய அளவில் பெரிய தலைவராக இருக்கும்போது, சிந்திக்கத் தெரிஞ்ச நீ ஏன் அரசியலுக்கு வரக்கூடாது” என்ற ‘அமைதிப்படை’ வசனத்துக்கு ஏன் சிரித்தோம் என இப்போது வருத்தமாக இருக்கிறது.