Watch Video | முதல்வர் பேரணியில், வேலைக்காக போராடிய ஆசிரியர்களை குண்டுக்கட்டாக தூக்கி வீசிய போலீஸார்..
பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாபில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு வேலை வழங்கக்கோரி முதலமைச்சர் சரண்ஜித் சிங்கின் வாகனத்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாபில் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் பெண்கள் என்று கூட பார்க்காமல் ஆசிரியர்கள் அடித்து இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாபில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு வேலை வழங்கக்கோரி முதலமைச்சர் சரண்ஜித் சிங்கின் வாகனத்தை வழிமறித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளும் அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களும் எழுப்பினர். இந்நிலையில், போராடிய ஆசிரியர்கள் மீது போலீஸார் அடக்குமுறையை ஏவிய காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
தேர்ச்சி பெற்றும் வேலை இல்லை:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமான ஆசிரியர்கள் தங்களுக்கு வேலை வேண்டும் எனக் கோரி நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். அண்மையில் கூட இந்தப் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆதரவு கொடுத்திருந்தார். இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிடுவதே ஆம் ஆத்மி தான் என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்து வருகிறது.
அண்மையில் கூட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கேஜ்ரிவால் வீட்டின் முன் சித்து போராட்டம் நடத்தினார். இந்தச் சூழ்நிலையில், நேற்று சங்கூர் என்னும் இடத்தில், முதல்வர் சரண்ஜித் சிங்கின் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனம் மற்றும் பாதுகாப்புக்கு வந்த வாகனங்களை மறித்து, வேலை வாய்ப்புக்கோரி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும், சிமென்ட் ஆலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த விழாவில் பிரியங்கா காந்தி கலந்து கொள்வதாக இருந்தது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை வாயைப் பொத்தி, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
NDTV நிறுவனம் பதிவு செய்திருக்கும் வீடியோ இங்கே..
வருது.. வருது..
இப்படியாக பல இடியாப்ப சிக்கல்களை எதிர்கொண்டுள்ள பஞ்சாப் மாநிலம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. இதில் பஞ்சாபைக் கைப்பற்ற பாஜக கடும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்க துடித்துக் கொண்டிருக்கிறது. யாரை இழுக்கலாம், எதைக் கவுக்கலாம் என்று தேர்தல் வியூகங்களை கட்சிகள் வகுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் சூழல் என்னவோ ஆம் ஆத்மிக்கு சாதகமாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கூட தொங்கு சட்டசபைக்கே கூடுதல் வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துகள் நிலவுகின்றன.
இந்தச் சூழலில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் இத்துடன் முடிந்துவிடும் எனக் கூறிவிட முடியாது. ஆட்சிகள் மாறினாலும் போராட்டக் காட்சிகள் மாறாது. நீதி கிடைக்கும் வரை ஆசிரியர்களும் போராட்டத்தைக் கைவிட மாட்டார்கள் என்றே தெரிகிறது.