Tamilisai Soundararajan : பட்ஜெட் குறித்து கோரிக்கை : புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை டெல்லி பயணம்..!
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "டெல்லியில் நரேந்திர மோடியை சந்தித்து தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.மேலும், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில மக்களின் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்தார்.
கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களுக்கும், செய்த உதவிகளுக்கும், நேற்றைய தினம் கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோர் சட்ட முன் வரைவிற்கும், பிரதமர் அளித்த ஊக்கத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டேன்" என்று பதிவிட்டார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதித்தார். மேலும், புதுச்சேரியில் 75-வது சுதந்திரதின விழாவையொட்டி, 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சருக்கு மரக்கன்றை ஒன்றையும் பரிசளித்தார்.
புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்குமா?
புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படு வழக்கமாகும். இருப்பினும், கடந்த 9 ஆண்டுகளாக மார்ச் மாதத்தில் vote on account-ம், ஆகஸ்ட் மாதத்தில் முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததால், மத்திய நிதி அமைச்சர் நேரடியாக புதுவைக்குரிய 5 மாத இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். புதுச்சேரி மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரான ரங்கசாமி, இந்த மாதத்தில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பணிகளை முடிக்கி விட்டுள்ளார்.புதுவை அரசின், ரூ.10,100 கோடிக்கு பட்ஜெட் தயாரித்து துணைநிலை ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், இதுவரை மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. புதுவை சட்டப்பேரவை வரும் 26ம் தேதி கூடுகிறது. பட்ஜெட்க்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக் கோரி, புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வரும் 23ம் தேதி டெல்லி பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே,புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.