உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் குளறுபடி - புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்...!
’’அக்டோபர் 21, 25, 28ஆம் தேதிகளில் நடக்கவிருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் நவம்பர் 2, 7, 13 ஆகிய தேதிகளில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு’’
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் உள்ள குளறுபடிகளை கண்டித்து காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது புதுச்சேரியில் இதுவரை கடந்த 1968 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் இருமுறை மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது. 2006 ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவிக்காலம் கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே முடிந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட கோரி பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவும், அக்டோபர் 31ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் அறிவித்த உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு முறைகள் சரியாக பின்பற்றவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, வார்டுகளுக்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவையெடுத்து உள்ளாட்சி தேர்தல் தேதிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டு கடந்த 2006ஆம் ஆண்டை போல பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான வார்டு இட ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்ட வருகின்ற நவம்பர் 2, 7, 13 ஆகிய தேதிகளில் மீண்டும் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம். இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில், தொகுதி சீரமைப்பில் பல குளறுபடிகள் உள்ளதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடுகளில் குளறுபடிகள் உள்ளதாகவும், மழை மற்றும் பண்டிகை காலங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசை கண்டித்தும், மாநில தேர்தல் ஆணையரை நீக்க கோரியும் புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இதற்காக காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நகரின் முக்கிய வீதிகளில் வியாபாரிகளை சந்தித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர். மேலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ, டெம்போ ஒட்டுனர்கள் சங்கம், தொழிற்சாலை நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினர்.
முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை, பல இடங்களில் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. அரசுப்பேருந்துகள் மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த முழு அடைப்பு போராட்டம் குறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பாரதி கண்ணனிடம் கேட்ட போது, புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அரசியல் கட்சியினர் ஆதரவு கேட்டுள்ளனர். எனவே இன்று மாலை 6 மணி வரை புதுவையில் தனியார் பஸ்கள் ஓடாது என தெரிவித்துள்ளார்.