"பதவி பிரமாணம் எடுத்தத மறந்துடிங்களா?" - போஸ்டர் யுத்தத்தில் பாஜகவை வெளுத்து வாங்கிய பிரியங்கா காந்தி
பாஜகவின் 'வெட்கக்கேடான' கிராபிக்ஸ் பதிவை கண்டிக்க வார்த்தைகள் போதாது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இன்னும் 30 நாள்களில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு இன்னும் 2, 3 நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து, அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியை டார்கெட் செய்யும் பாஜக:
இதன் காரணமாக, அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி தொடங்கி பாஜக தலைவர்கள் வரை, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி வருகின்றன. குறிப்பாக, ராகுல் காந்தியின் இமேஜை உடைக்கும் நோக்கில் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், ராவணனை போல் ராகுல் காந்தியை சித்தரித்து பாஜக, கிராபிக்ஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஏழு தலை கொண்ட ராவணனை ராகுல் காந்தி போல் சித்தரித்து மட்டும் இன்றி, ஹங்கேரி நாட்டு தொழிலதிபரான ஜார்ஜ் சோரோஸ்-க்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர் இருப்பதாகவும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
"நவீன காலத்து ராவணன்"
ராகுல் காந்தியை நவீன காலத்து ராவணன் என்றும் தீய சக்தி என்றும் அந்த பதிவில் பாஜக விமர்சித்துள்ளது. தர்மத்திற்கு எதிராகவும் ராமருக்கு எதிராகவும் செயல்படும் ராகுல் காந்தி பாரதத்தை அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளார் என்றும் பாஜக விமர்சித்துள்ளது.
இந்த புகைப்படம் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. தேர்தலில் தோல்வி பயம் காரணமாக பாஜக இப்படி செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
அளித்த வாக்குறுதிகளை மறந்தது போல், எடுத்த பதவி பிரமாணத்தையும் பாஜக தலைவர்கள் மறந்துவிட்டனரா என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், "மிகவும் மதிப்பிற்குரிய நரேந்திரமோடி மற்றும் ஜெ.பி. நட்டா அவர்களே, அரசியலையும் பொது விவாதத்தையும் எந்த அளவிற்கு சீரழிவுக்கு கொண்டு செல்ல விரும்புகிறீர்கள்?
எடுத்த பதவி பிரமாணத்தை மறந்துவிட்டீங்களா?
உங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்படும் ஆத்திரமூட்டும் வன்முறையை தூண்டும் ட்வீட்களுடன் உடன்படுகிறீர்களா? நேர்மையுடன் இருப்பேன் என நீங்கள் உறுதிமொழி ஏற்று அதிகம் நேரம் ஆகிவிடவில்லை. வாக்குறுதிகளை போன்று, எடுத்து கொண்ட பதவி பிரமாணத்தையும் மறந்துவிட்டீர்களா?" என குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக கடும் எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே .சி. வேணுகோபால், "ராகுல் காந்தியை ராவணனுடன் ஒப்பிடும் பாஜகவின் 'வெட்கக்கேடான' கிராபிக்ஸ் பதிவை கண்டிக்க வார்த்தைகள் போதாது. அவர்களின் மோசமான நோக்கங்கள் தெளிவாக தெரிகின்றன. அவர்கள் அவரை கொலை செய்ய விரும்புகிறார்கள். அவரின் பாட்டி மற்றும் தந்தையை படுகொலை செய்துள்ளார்கள். அற்ப அரசியல் காரணங்களுக்காக அவருடைய SPG பாதுகாப்பை விலக்கிக் கொண்டனர்" என்றார்.