அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு... உடல்நிலை எப்படி இருக்கிறது?
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என குடியரசு தலைவர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
President Murmu underwent successful cataract surgery of her left eye at Army Hospital Research & Referral, Delhi Cantt today at 11:30am. Surgery was conducted by Brig SK Mishra & his team. She was discharged from hospital at 1:30pm & advised rest: Army Hospital R&R
— ANI (@ANI) October 16, 2022
(File pic) pic.twitter.com/KkvpsLtkBV
64 வயதான குடியரசு தலைவர் முர்மு, இந்தாண்டு ஜூலை 25ஆம் தேதி, இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக பதவியேற்று கொண்டார். திரௌபதி முர்முவுக்கு அப்போதைய இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்புக்கு பிறகு பேசிய முர்மு, "குடியரசு தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கோடிக்கணக்கான பெண்களின் கனவையும் திறனையும் பிரதிபலிக்கிறது.
இந்தியர்களின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், உரிமைகள் ஆகியவற்றின் சின்னமாக திகழும் நாடாளுமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன். அதற்காக, தாழ்மையுடன் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த புதிய பொறுப்பை ஏற்று வழி நடத்த உங்களின் நம்பிக்கையும் ஆதரவும் பெரும் பலமாக இருக்கும்.
சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசு தலைவர் நான். சுதந்திர இந்தியாவின் குடிமக்கள் மீது சுதந்திர போராட்ட வீரர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நமது முயற்சிகளை விரைவாக்க வேண்டும்.
குடியரசு தலைவர் பதவியை அடைந்திருப்பது எனது தனிப்பட்ட சாதனை அல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை மக்களின் சாதனை இது. ஏழை மக்கள் கனவு காண்பது மட்டும் இன்றி அதை நிறைவேற்றவும் முடியும் என்பதற்கு எனது தேர்வே சாட்சி" என்றார்.
திரெளபதி முர்மு, எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து வரலாறு படைத்தார்.
முதல் பழங்குடியினராகவும், நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெறுமையையும் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் ஆளுநராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெறுமையும் முர்முவையே சாரும்.
ஒடிசாவிலிருந்து இரண்டு முறை பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முர்மு, பிஜு ஜனதா தளம், பாஜக ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சி செய்தபோது நவீன் பட்நாயக் அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு விகித்தார். ஒடிசா அரசில் போக்குவரத்து, வணிகம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற அமைச்சகங்களை கையாண்ட பல்வேறு நிர்வாக அனுபவத்தை கொண்டவர் முர்மு.
கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய முர்மு, பின்னர் ராய்ரங்பூர் தேசிய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவரானார்.