"அறிவுக் களஞ்சியமாக திகழும் பழங்குடிகள்" ஐஐடி பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் பேச்சு!
இயற்கையான வாழ்க்கை முறையின் மூலம் திரட்டப்பட்ட அறிவுக் களஞ்சியமாக பழங்குடிகள் மக்கள் இருக்கின்றனர் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் நகரில் உள்ள ஐஐடி பட்டமளிப்பு விழாவில் இன்று இந்தியக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார்.
விழாவில் பேசிய குடியரசுத்தலைவர், ஐ.ஐ.டி மாணவர்கள் தங்களது முன்னோடி சிந்தனை, பயிற்சி, மனப்பான்மை, புதுமையான அணுகுமுறை, தொலைநோக்குப் பார்வை மூலம் நாட்டின், உலகின் முன்னேற்றத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை செய்துள்ளனர் என்றார்.
ஐஐடி மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு:
பல உலகளாவிய நிறுவனங்களை வழிநடத்துவதன் மூலம், அவர்கள் தங்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சி திறன்களால் 21-ம் நூற்றாண்டின் உலகத்தை பல வழிகளில் வடிவமைக்கிறார்கள். ஐஐடியின் பல முன்னாள் மாணவர்கள் தொழில்முனைவோர் பாதையைத் தேர்ந்தெடுத்து புதிய வேலைகளை உருவாக்கியுள்ளனர்.
அவர்கள் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தையும் ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்தையும் ஊக்குவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். தொழில் துறையில், "ஆபத்து இல்லை என்றால், ஆதாயம் இல்லை" என்று கூறுவார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுய வேலைவாய்ப்பில் ஆபத்தை தவிர்க்கின்ற மனப்பான்மையுடன் வெற்றியை அடைய முடியாது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
பட்டம் பெறும் மாணவர்கள் ஆபத்தை எதிர்கொள்ளும் ஆர்வத்துடன் தொடர்ந்து முன்னேறுவார்கள், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவார்கள். உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கு பணியாற்றுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"பழங்குடிகளிடமிருந்து கற்று கொள்ள வேண்டும்"
சத்தீஸ்கர் மாநிலம் பழங்குடியின கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் நிறைந்தது என்று குடியரசுத்தலைவர் கூறினார். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இயற்கையை நெருக்கமாகப் புரிந்துகொண்டு, பல நூற்றாண்டுகளாக சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் இயற்கையான வாழ்க்கை முறையின் மூலம் திரட்டப்பட்ட அறிவுக் களஞ்சியம். அவர்களைப் புரிந்துகொள்வதன் மூலமும், அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை நாம் செய்ய முடியும்.
நமது பழங்குடியின சகோதர சகோதரிகளின் தீவிர பங்கேற்பால் மட்டுமே நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியமாகும். பழங்குடி சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தொழில்நுட்பத் துறையில் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டதற்காக பிலாய் ஐ.ஐ.டி-ஐ அவர் பாராட்டினார்.
பிலாய் ஐஐடி வேளாண் தொழில்நுட்பம், சுகாதார– தொழில்நுட்பம் நிதி- தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருவது குறித்து குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த நிறுவனம் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து கிராமப்புற மக்கள் வீட்டிலிருந்தபடியே மருத்துவ உதவி பெற செல்பேசி செயலிகளை உருவாக்கியுள்ளது.
இந்த நிறுவனம் ராய்ப்பூரில் உள்ள இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கி, அவர்களின் வளங்களை முறையாக பயன்படுத்தவும் வழிகாட்டவும் உதவுகிறது. மஹுவா போன்ற சிறு வனப் பொருட்களில் பணிபுரியும் பழங்குடி சமூகங்களின் வளர்ச்சிக்காக ஐ.ஐ.டி பிலாய் செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.