அரசியல் கட்சிக்கு கவுண்டவுன்.. தலித்துகள், முஸ்லிம்களை குறிவைக்கும் பிரசாந்த் கிஷோர்.. பீகாரில் பரபர!
வரும் அக்டோபர் 2ஆம் தேதி, அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தொடங்க போவதாக ஜன் சுராஜ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டவர் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்.
பிரசாந்த் கிஷோரின் திட்டம்: 2014 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கும் 2017ஆம் ஆண்டு, உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் 2019 ஆம் ஆண்டு, ஆந்திராவில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் 2021ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் திமுகவுக்கும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆலோசனைகளை வழங்கினார்.
2021 ஐந்து மாநில தேர்தலுக்கு முன்புவரை, ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வழங்கி வந்தார். ஆனால், அதன் பிறகு, தேர்தல் ஆலோசனைகள் வழங்குவதை நிறுத்த போவதாக அறிவித்தார்.
இதையடுத்து, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியில் இணைந்தார். அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டது. நிதிஷ் குமாருடன் மாற்று கருத்து ஏற்பட, அதிலிருந்து விலகினார். பின்னர், ஜன் சுராஜ் என்ற இயக்கத்தை தொடங்கினார்.
தலித்கள், முஸ்லிம்களுக்கு குறி? தனது சொந்த மாநிலமான பீகாரில் இரண்டு ஆண்டுகளாக யாத்திரை சென்றார். அவ்வப்போது தேர்தலில் கருத்துக்கணிப்புகளை வழங்கி வந்தார். மக்களவை தேர்தலில் கூட பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்புகளை வழங்கியிருந்தார்.
அது தவறானதையடுத்து, இனி கட்சிகளுக்கு கிடைக்கப்போகும் எண்ணிக்கை குறித்து தான் பேசப் போவதில்லை என கூறினார். இந்த நிலையில், வரும் அக்டோபர் 2ஆம் தேதி, அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், "கட்சி விவகாரங்களில் தலைமை தாங்கி கொண்டு செல்ல 21 தலைவர்கள் கொண்ட குழுவை நிறுவ திட்டமிட்டுள்ளேன். அடுத்த ஆண்டு, பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் 243 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். ஜான் சுராஜ் இயக்கத்தின் நோக்கமே கட்சிக்கு தனித்துவமான வாக்குவங்கியை உருவாக்குவதுதான்" என்றார்.
நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக பீகார் உள்ளது. பாஜக, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை செல்வாக்கு படைத்த கட்சிகளாக திகழ்கின்றன. சமூக நீதி அரசியலுக்கு பேர் போன தலைவர்களே, கடந்த 40 ஆண்டுகளாக அங்கு முதலமைச்சராக இருந்துள்ளனர்.
லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, நிதிஷ் குமார், ஜிதன் ராம் மாஞ்சி ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், தலித்கள், இஸ்லாமியர்களை குறிவைத்து அரசியலில் தனது காய்களை நகர்த்தி வருகிறார்.
சமீபத்தில், கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "2025 சட்டமன்றத் தேர்தலில் ஜன் சூராஜ் கட்சி 75 முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்த உள்ளது" என்றார்.