AB PM-JAY Scheme: 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
70 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்திற்கான ஆயுஷ்மான் வே வந்தனா அட்டையை எப்படி பெறுவது என்று தெரியுமா.?

70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், ஆயுஷ்மான் செயலியை பயன்படுத்தி, ஆயுஷ்மான் வே வந்தனா அட்டையை பெற முடியும். அதன் மூலம் 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சை அவர்களுக்கு கிடைக்கும்.
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம்
மத்திய அரசு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள், ஏழை எளிய மக்கள், மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையிலான பிரதமரின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பயன்பெறும் திட்டம்தான் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய ஜோஜனா திட்டம்(AB PM-JAY).
இந்த திட்டம், இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு, குறிப்பிடத்தக்க மருத்துவ நலன்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம், 70 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும், அவர்களின் பொருளாதார நிலை எதுவாக இருந்தாலும் அதை கணக்கில் கொள்ளாமல், 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம்.
இந்த திட்டத்தில் பயன்பெற, மூத்த குடிமக்கள் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில், அதன் மூலம் கிடைக்கும் ‘ஆயுஷ்மான் வே வந்தனா அட்டை‘யை பயன்படுத்தி, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில், 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெறலாம். அவர்கள் பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை இருந்தாலே போதும்.
வே வந்தனா அட்டையை பெற எப்படி விண்ணப்பிப்பது.?
இந்த பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் பதிவு செய்ய, ஆதார் அடிப்படையிலான e-KYC கட்டாயம். இதை வைத்தே, தகுதியான மூத்த குடிமக்களை பதிவு செய்து, அவர்களுக்கு ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் பதிவு செய்யும்போது, ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தால், அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிறந்த தேதியாக எடுத்துக்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு, PMJAY இணையதளம் அல்லது ஆயுஷ்மான் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அல்லது, www.beneficiary.nha.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ, PMJAY மையங்கள் மூலமாவோ பதிவு செய்யலாம்.
ஒரே குடும்பத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட 70 வயதுக்கு அதிகமானோர் இருந்தால், ஒருவருக்கு ஆப்பில் பதிவு செய்துவிட்டு, Add Member-ல் சென்று அடுத்த உறுப்பினரை சேர்த்துக் கொள்ளலாம்.
இப்படி பதிவு செய்த உடன், ஒவ்வொரு தகுதியான மூத்த குடிமக்களுக்கும் தனித்துவமான ஆயுஷ்மான் வே வந்தனா அட்டை வழங்கப்படும். அந்த அட்டைகளை, இணையதளத்திலோ அல்லது ஆப்பிலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயனாளிகள் பதிவு செய்த முதல் நாளிலிருந்தே மருத்து சிகிச்சையை பெறத் தொடங்கலாம். தாங்கள் பெற்ற ஆயுஷ்மான் வே வந்தனா அட்டையை, அத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று, 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச சிகிச்சையை பெறலாம்.





















