PM Modi in US: 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை... ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி..!
இன்று மாலை வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் ஜோ பைடன் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தில் இரண்டாவது நாளான இன்று வாஷிங்டன் சென்றடைந்தார். இங்கு அவர் வர்ஜீனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் ஜில் பைடனை சந்தித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரை வரவேற்றனர்.
செய்தியாளர்கள் சந்திப்பு:
இன்று மாலை வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் ஜோ பைடன் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் இன்று மாலை பிரதமர் மோடிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இந்திய- அமெரிக்க உறவு குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், அதன்பிறகு வெள்ளை மாளிகையில் அரசு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று மாலை பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். கூட்டு அமர்வில் இது அவரது இரண்டாவது உரையாகும். முன்னதாக, 2016ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் வழங்கும் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடிக்கு கிடைக்கவிருக்கும் பரிசு:
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட இருக்கும் பரிசுகள் குறித்த தகவலை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கைகளால் தயாரிக்கப்பட்ட பழமையான அமெரிக்க புத்தக கேலரியை வழங்க இருக்கிறார்கள். இதனுடன், 20 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விண்டேஜ் அமெரிக்க கேமராவையும் ஜனாதிபதி பைடன் வழங்குகிறார். மேலும், ஜார்ஜ் ஈஸ்ட்மேனின் முதல் கோடாக் கேமராவுக்கான காப்புரிமை பற்றிய பதிவும் வழங்கப்பட இருக்கிறது.
தொடர்ந்து, ஜோ பைடன் சார்பில் அமெரிக்க வனவிலங்கு புகைப்படம் பற்றிய ஹார்ட்கவர் புத்தகமும், ஜில் பைடன் சார்பில் ராபர்ட் ஃப்ரோஸ்டின் கவிதைகளின் முதல் பதிப்பின் புத்தகமும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட இருக்கிறது.
நடன நிகழ்ச்சிகள்:
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோருடன் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள் தொடர்பான இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் ஸ்டுடியோ தூம் கலைஞர்கள் நடனமாடினர். ஸ்டுடியோ தூம் என்பது ஒரு இந்திய நடன கலைக்குழு ஆகும்.