13.2 கிமீ நீட்டிக்கப்பட்ட பெங்களூரு மெட்ரோ; 22 நிமிடத்தில் பயணிக்கலாம்.. பிரதமர் திறந்துவைக்கிறாரா?
சாதாரணமாக ஒயிட்ஃபீல்டில் இருந்து கேஆர் புரம் வரை சாலைப் பயணம் செய்ய குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை கூட ஆகும். ஆனால் புதிய மெட்ரோவில் 22 நிமிடங்களுக்குள் சென்று சேர்ந்துவிடலாம்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒயிட்ஃபீல்ட்-கேஆர் புரம் மெட்ரோ பிரிவை (13.2 கி.மீ.) பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகா தேர்தலுக்கு முன்னதாக வருகிற மார்ச் 25 அன்று திறந்து வைக்கிறார்.
பெங்களூரில் மெட்ரோ ரயில் புதிய பாதை
இந்த பகுதி பெங்களூரின் கிழக்கு-மேற்கு காரிடரின் (ப்ளூ லைன்) விரிவாக்கமாகும். 15 கிமீ பைப்பனஹள்ளி-ஒயிட்ஃபீல்ட் பகுதி முழுவதும் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றாலும், பல காரணங்களால் அதன் வேலைகள் சில ஆண்டுகள் நீண்டுவிட்டன. மேலும், பென்னிகனஹள்ளியில் ரயில்வே தண்டவாளத்தில் 'ஓபன் வெப் கிரைடர்' தொடங்கும் பணி காரணமாக தாமதமாகி வரும் மீதமுள்ள கேஆர் புரம்-பைப்பனஹள்ளி பிரிவு 2023 ஜூன்-ஜூலைக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎம்ஆர்சிஎல்) நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ், வைட்ஃபீல்ட்-கேஆர் புரம் பிரிவில் தினசரி சுமார் 1.2 லட்சம் பயணிகளை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார். பைப்பனஹள்ளி-கேஆர் புரம் பகுதி தயாராகும் வரை மெட்ரோ பயணிகளுக்காக கேஆர் புரம் மற்றும் எஸ்வி சாலை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே பிரத்யேக ஃபீடர் பஸ் சேவைகளை இயக்க பிஎம்டிசி (பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம்) உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றார்.
13 கிலோமீட்டரை 22 நிமிடத்தில் கடக்கலாம்
"மெட்ரோவில் வைட்ஃபீல்டு மற்றும் கேஆர் புரம் இடையே பயண நேரம் சுமார் 22 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். சாதாரணமாக ஒயிட்ஃபீல்டில் இருந்து கேஆர் புரம் வரை சாலைப் பயணம் செய்ய குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை கூட ஆகும். வைட்ஃபீல்ட்-கேஆர் புரம் மெட்ரோவிற்கு நல்ல ஆதரவை மக்கள் வழங்குவார்கள். ஒயிட்ஃபீல்டு - கே.ஆர். புரம் இடையே வேலை, ஷாப்பிங் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகப் பயணிக்கும் மக்கள் எண்ணிக்கை பெரிதாக உள்ளது. அவர்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்துவதை காண ஆவலோடிருக்கிறோம்", என்றார்.
10 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மேலும், "பைப்பனஹள்ளி-கேஆர் புரம் இயக்கப்பட்டதும், பயணிகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். ஏனெனில் இது கெங்கேரி/சல்லகட்டா வரை அனைத்து வழிகளிலும் இயங்கும்," என்று அவர் கூறினார். அதிகாரிகளின் கூற்றுப்படி, வைட்ஃபீல்டு மற்றும் கேஆர் புரம் இடையே அதிகபட்ச கட்டணம் ரூ. 35 ஆக இருக்கும். BMRCL இந்த வழித்தடத்தில் உள்ள ஏழு BEML ரயில்களில் ஐந்தை 10-12 நிமிட இடைவெளியில் வணிக சேவைகளுக்காக இயக்கும் என்று தெரிகிறது.
தினசரி பயணிகள் எண்ணிக்கை 9 லட்சமாக உயரும்
தற்போது, 'நம்ம மெட்ரோ'வின் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 5.3 லட்சம் முதல் 5.6 லட்சம் வரை உள்ளது. பைப்பனஹள்ளி-ஒயிட்ஃபீல்ட் மெட்ரோ முழுவதுமாக செயல்பட்டவுடன் கூடுதலாக 4 லட்சம் பயணிகளை பிஎம்ஆர்சிஎல் எதிர்பார்க்கிறது, மொத்த எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் அதிகமாகும். மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் (சிஎம்ஆர்எஸ்) பிப்ரவரி 22-24, 2023 அன்று ஒயிட்ஃபீல்ட்-கேஆர் புரம் பகுதியை ஆய்வு செய்தார், மேலும் தொடங்குவதற்கு முன் பிஎம்ஆர்சிஎல் கடைபிடிக்க 58 நிபந்தனைகளை விதித்தார். நிலுவையில் உள்ள அனைத்து முக்கியப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும், திறப்பு விழா/வணிகச் செயல்பாடுகளுக்குத் தயாராக உள்ளதாகவும் பர்வேஸ் கூறினார். சி.எம்.ஆர்.எஸ் நிபந்தனையின்படி, கருடாசர்பால்யா மற்றும் கே.ஆர்.புரம் இடையே உள்ள கீழ்நிலையில் (ஒற்றை பாதையில்) மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.