Varanasi Cricket Stadium: வாரணாசியில் பிரம்மாண்டம்.. சிவனை பிரதிபலிக்கும் கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்
வாரணாசியில் கட்டப்பட உள்ள புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
Varanasi Cricket Stadium: கடவுள் சிவனை அடிப்படையாக கொண்டு வாரணாசியில் உலகத்தரத்திலான புதிய, கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது. வாரணாசியில் கட்டப்பட உள்ள புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடி அடிக்கல்:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி, ஆயிரத்து 115 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார். அதோடு, பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ.450 கோடியில் சிவனின் உருவத்தை அடிப்படையாக கொண்டு 30 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைய உள்ளது.
இந்த மைதானத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். காசியில் 108 ருத்ராக்ஷ் மணிகள் கொண்ட சிவலிங்க வடிவில் கட்டப்பட்ட, ருத்ராக்ஷ் சர்வதேச மாநாட்டு மையத்தில் தான் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில், முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். விழாவின்போது பிரதமர் மோடிக்கு சச்சின் சிறப்பு பரிசு ஒன்றை வழங்கினார். 'நமோ' என்ற பெயர் பொறிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி பரிசாக வழங்கப்பட்டது.
”இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்"
புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசுகையில், ”இன்று வாரணாசிக்கு வருகை தருவதற்கு எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சந்திரயான் 3 நிலவில் இறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' என்று பெயர் சூடப்பட்டது. மற்றொரு சிவசக்தி இங்கு வர உள்ளது. சந்திராயான் 3 வெற்றி அடைந்ததற்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகளை தெரிவிக்கிறேன். வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இன்று அடிக்கல் நாடப்பட்டது. இது இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப் போகிறது. கிரிக்கெட்டில் உலகமே இணைந்துள்ளது.
எனவே, இன்று அடிக்கல் நாட்டப்பட்ட கிரிக்கெட் மைதானத்திற்கு பல நாடுகளில் இருந்து வீரர்கள் விளையாட முன்வருவார்கள். இந்திய வீரர்களுக்கு இந்த மைதானம் பயன்படும். மகாதேவ் நகரில் உள்ள இந்த மைதானம் 'மகாதேவ்வுக்கே' அர்ப்பணிக்கப்படும். விளையாட்டில் இந்தியா கண்டுவரும் வெற்றி, விளையாட்டு மீதான பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு சான்றாகும். ஒரு காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விளையாட சென்றால் திட்டுவார்கள். ஆனால் அது இப்போது உண்மை இல்லை.
பல குழந்தைகள் இன்று விளையாட்டில் வெற்றி வாகையை சூடிவருகின்றனர். ஒரு பகுதியில் விளையாட்டு உள்கட்டமைப்பு கட்டமைக்கப்படும் போது, இளைஞர்களுக்கு மட்டுமல்ல, பொருளாதாரத்துக்கும் ஊக்கமளிக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து நிலைகளிலும் அரசு உதவி செய்து வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் தொடங்கவுள்ளது. விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் பிரதமர் மோடி.