"1.1 கோடி பயணிகள், 25 ரயில்கள்" வந்தே பாரத் குறித்து ரிப்போர்ட் கார்டு கொடுத்த பிரதமர் மோடி
"இந்தியாவில் ஒரு நாளில் ரயில்வேயில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் புதிதாக 9 வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
"அனைத்து பகுதிகளையும் வந்தே பாரத் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை"
ரயில் சேவையை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, "முன்னதாக, இந்திய ரயில்வேயை நவீனமயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படாதது துரதிர்ஷ்டவசமானது. அதன் மாற்றத்திற்காக நமது அரசாங்கம் பாடுபடுகிறது. உள்கட்டமைப்பு வளர்ச்சியின் வேகம் மற்றும் அளவு 140 கோடி இந்தியர்களின் கனவுகளுடன் பொருந்துகிறது.
வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, 1 கோடியே 11 லட்சம் பயணிகள் அதில் பயணம் செய்துள்ளனர். 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்போது மேலும் ஒன்பது ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
"நடுத்தர மக்களின் நம்பகமான சக பயணி இந்தியன் ரயில்வேஸ்"
இந்திய ரயில்வே இந்தியாவின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகவும் நம்பகமான சக பயணியாகும். இந்தியாவில் ஒரு நாளில் ரயில்வேயில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம். அனைத்து இந்தியர்களும் புதிய இந்தியாவின் சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறார்கள்.
சந்திரயான்-3 இன் வெற்றியால் சாமானியர்களின் எதிர்பார்ப்புகள் வானத்தை எட்டியுள்ளன. ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை இந்தியாவின் சக்தி என்ற நம்பிக்கையை ஜி20 உச்சிமாநாட்டின் வெற்றி அளித்துள்ளது.
பெண்கள் தலைமையிலான நமது வளர்ச்சியை உலகமே பாராட்டி, இந்த தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்காக பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது" என்றார்.
புதிய வந்தே பாரத் ரயில்கள்:
உதய்பூரில் இருந்து ஜெய்ப்பூர் இடையே இயக்கப்படவுள்ளது. இதையடுத்து ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு வரையும் ஒரு வந்தேபாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. இத்துடன் விஜயவாடாவில் இருந்து ரேணிகுண்டா வழியாக சென்னை வரையில் மற்றொரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.
மேலும் பாட்னாவில் இருந்து ஹவுரா வரையும், கேரள மாநிலத்தின் காசர்கோடில் இருந்து திருவனந்தபுரம் வரையிலும், ரூர்கேலா முதல் புவனேஸ்வர் வழியாக பூரி வரையிலும், ராஞ்சியில் இருந்து ஹவுரா வரையிலும் மற்றும் ஜாம்நகர் முதல் அகமதாபாத் வரையிலும், தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் இருந்து மதுரை மார்க்கமாக சென்னை வரை இயக்கப்படவுள்ளது.