விறுவிறுப்பாகும் தேர்தல் களம்.. டெல்லியில் முக்கிய மீட்டிங்.. பக்காவாக திட்டம் வகுக்கும் பிரதமர் மோடி..
பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பாஜக அசுர பலத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இன்னும் 10 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
எதிர்க்கட்சிகளை வீழ்த்த பாஜக வியூகம்:
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வியூகத்தை வீழ்த்தி 2024ஆம் ஆண்டிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரவிருக்கும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் அமைப்பதற்காக ஜூன் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் டெல்லியில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "பாஜக ஒவ்வொரு தேர்தலையும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. நன்கு வடிவமைக்கப்பட்ட தேர்தல் உத்திகளை முறையாகப் பின்பற்றுகிறது.
எங்களைப் பொறுத்தவரை, தேசம் முதன்மையானது. அனைத்து தேர்தல்களிலும் வளர்ச்சி அரசியலே நமது தேர்தல் உத்தியாக இருக்கும். இது எங்கள் விவாதங்களில் அதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்றார்.
டெல்லியில் முக்கிய மீட்டிங்:
பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் மற்றும் கட்சியின் பிற பொதுச் செயலாளர்கள் போன்ற மூத்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மற்றொரு முக்கிய தலைவர் கூறுகையில், "இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்கலாம். பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த தங்கள் செயல்திறன் அறிக்கைகளை சமர்பிப்பார்கள். இந்தக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டால், பாஜக ஆளும் அரசாங்கங்களின் செயல்பாடுகள் குறித்து அவருக்கு தெரிவிக்கப்படும்" என்றார்.
இந்தாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. மூன்று மாநிலங்களிலும் பாஜக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக நடைபெற்ற கர்நாடக தேர்தலில், காங்கிரஸ் மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது.
அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டின் இறுதியில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி ஆளும் தெலங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ளது.