பாகிஸ்தான் மீது தாக்குதல்.. வீடியோ எடுத்தது ஏன்? காரணம் சொல்லும் பிரதமர் மோடி
இந்தியா மேற்கொண்ட விமானப்படை தாக்குதலை வீடியோ எடுத்ததற்கு காரணம் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்டால் கொடுப்பதற்காக வீடியோ எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட விமானப்படை தாக்குதலை வீடியோ எடுத்ததற்கு காரணம் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்டால் கொடுப்பதற்காக வீடியோ எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
மனம் திறந்த பிரதமர் மோடி:
குஜராத் மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சியைக் குறிக்கும் 20வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, "நாங்கள் 22 நிமிடங்களில் ஒன்பது பயங்கரவாத தளங்களை இடித்துத் தரைமட்டமாக்கினோம். இந்த முறை நாங்கள் அதை கேமராவில் பதிவு செய்தோம். அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்தோம். நாட்டில் யாரும் ஆதாரம் கேட்கக்கூடாது என்பதற்காக இப்படி செய்தோம்" என்றார்.
காங்கிரஸ் மற்றும் நாட்டின் முதல் பிரதமர் நேருவை விமர்சித்த மோடி, "அடிமை சங்கிலிகள் வெட்டப்பட்டிருக்க வேண்டும். நாடு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அன்றிரவு, காஷ்மீர் மண்ணில் முதல் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் இந்தியாவின் ஒரு பகுதியைக் கைப்பற்றியது. அன்று, இந்த முஜாஹிதீன்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரை இந்திய ராணுவம் நிறுத்தப்படுவதை சர்தார் (வல்லபாய்) படேல் விரும்பவில்லை. ஆனால் அவரது வார்த்தைகள் கவனிக்கப்படவில்லை.
"நிராயுதபாணியான அப்பாவிகள்"
பயங்கரவாதிகள் அன்றிரவு இரத்தத்தை ருசித்தனர். அவர்களின் தொடர் தாக்குதல்கள் 75 ஆண்டுகளாகத் தொடர்கின்றன. பஹல்காமிலும், இதன் ஒரு வக்கிரமான வடிவம் காணப்பட்டது. 75 ஆண்டுகளாக நாங்கள் பொறுத்துக் கொண்டிருந்தோம்.
ஒவ்வொரு முறை போர் வெடித்தபோதும், மூன்று முறையும், இந்தியாவின் ராணுவ வலிமை பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்தியாவுடன் போரில் வெற்றி பெற முடியாது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொண்டது. எனவே, அது ஒரு மறைமுகப் போரைத் தொடங்கியது.
ராணுவப் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறார்கள். நிராயுதபாணியான அப்பாவிகள், எதோ ஒரு பேருந்தில் பயணம் செய்கிறார்கள். எதோ ஒரு ஹோட்டலில் இருக்கிறார்கள். எதோ ஒரு சுற்றுலாப் பயணியாக இருக்கிறார்கள்.
பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பு கிடைத்த இடங்களில், அவர்கள் கொலை செய்து கொண்டே இருந்தார்கள். நாங்கள் பொறுத்துக் கொண்டே இருந்தோம். இனியும் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டுமா? நமது அண்டை வீட்டாரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் அவர்கள் நம்மை நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், நாம் மீண்டும் மீண்டும் நமக்கு சவால் விடுக்கும்போது, இதுவும் துணிச்சலானவர்களின் நாடு என்பதை காட்ட வேண்டும்" என்றார்.





















