"மக்களால் மக்களுக்காக மக்களே" புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி கருத்து!
ஜனநாயகத்தின் அடித்தளமான "மக்களால், மக்களுக்காக, மக்களே" என்ற உணர்வை புதிய குற்றவியல் சட்டங்கள் வலுப்படுத்துகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தியது குறித்து சண்டிகரில் பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.
மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வால் உத்வேகம் பெற்று இந்திய நியாயச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான கட்டத்தில் நாடு உள்ளது" என்றார்.
புதிய குற்றவியல் சட்டங்கள் எப்படி உருவாக்கப்பட்டது?
நாட்டின் மக்களுக்காக நமது அரசியலமைப்பு வகுத்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான உறுதியான முயற்சி இது என்று அவர் மேலும் கூறினார். சட்டங்கள் எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பதை நேரடி செயல் விளக்கம் மூலம் இப்போதுதான் பார்த்திருப்பதாக மோடி குறிப்பிட்டார்.
நாட்டின் பல உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் ஒத்துழைப்புடன் உச்ச நீதிமன்றத்தின் பல தலைமை நீதிபதிகளின் ஆலோசனைகளும் புதிய குற்றவியல் சட்டத்தில் அடங்கியிருப்பதாக அவர் கூறினார். உச்ச நீதிமன்றம், 16 உயர் நீதிமன்றங்கள், நீதித்துறை அகாடமிகள், சட்ட நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பல வல்லுநர்கள் உட்பட பல பங்குதாரர்கள் இடையே விவாதம் நடத்தி, தங்களது பல ஆண்டு கால பரந்த அனுபவத்தைப் பயன்படுத்தி புதிய நியாயச் சட்டங்களுக்கு தங்கள் ஆலோசனைகளையும், யோசனைகளையும் வழங்கியதாக அவர் கூறினார்.
இன்றைய நவீன உலகில் தேசத்தின் தேவைகள் குறித்து விவாதங்கள் நடந்தன என்றும் அவர் குறிப்பிட்டார். சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் நீதித்துறை சந்தித்த சவால்கள் குறித்தும், ஒவ்வொரு சட்டத்தின் நடைமுறை அம்சம் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது என்றும் மோடி குறிப்பிட்டார்.
"மக்களால், மக்களுக்காக, மக்களே"
அனைவரின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த நியாயச் சட்டம், இந்தியாவின் நீதித்துறை பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார். அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கான வழிமுறையாக, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷாரால் குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்று குறிப்பிட்ட மோடி, 1857-ம் ஆண்டு நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து 1860-ம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய சாட்சியச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் சிஆர்பிசியின் முதல் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தது என்று அவர் கூறினார். இந்த சட்டங்களின் நோக்கம் இந்தியர்களை தண்டிப்பதும், அவர்களை அடிமைப்படுத்துவதும் என்று மோடி குறிப்பிட்டார்.
நாடு சுதந்திரம் அடைந்து பல பத்தாண்டுகளுக்குப் பிறகும், நமது சட்டங்கள், தண்டனை மனப்பான்மையைச் சுற்றியே சுழல்வது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் தெரிவித்தார். அவ்வப்போது சட்டங்கள் மாற்றப்பட்டாலும், அவற்றின் தன்மை அப்படியே இருந்ததாக அவர் மேலும் கூறினார்.
அடிமைத்தனம் குறித்த இந்த மனப்பான்மை இந்தியாவின் முன்னேற்றத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மோடி சுட்டிக்காட்டினார். காலனி ஆதிக்க மனப்பான்மையிலிருந்து நாடு தற்போது வெளியே வர வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், தேச நிர்மாணத்திற்கு தேசத்தின் வலிமை பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு தேசிய சிந்தனை தேவைப்பட்டது. இந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது, அடிமைத்தனத்திலிருந்து விடுபட நாட்டுக்கு உறுதியளித்ததை அவர் நினைவு கூர்ந்தார். புதிய குற்றவியல் சட்டங்கள் ஜனநாயகத்தின் அடித்தளமான "மக்களால், மக்களுக்காக, மக்களே" என்ற உணர்வை வலுப்படுத்துகின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.