Modi in Manipur: மணிப்பூரை அமைதி, செழிப்பின் அடையாளமாக மாற்றுவோம், நான் மக்களுடன் இருக்கிறேன் - மோடி
மணிப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பேசும்போது, மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்றுவோம் என கூறியுள்ளார்.

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், இன்று அங்கு சென்ற பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, நான் மக்களுடன் இருக்கிறேன், மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்றுவோம் என உறுதிபடக் கூறினார்.
ரூ.8,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்
மணிப்பூர் மாநிலம் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு, அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில, இன்று மணிப்பூர் சென்ற பிரதமர் மொடி, சூரசந்த்பூரில் 8,500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் ந்ட்டினார்.
அதன்பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
“மணிப்பூர் மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்பேன்“
பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மணிப்பூர் தைரியம் மற்றும் துணிச்சலின் பூமி என குறிப்பிட்டார். மணிப்பூர் மக்களின் ஆர்வத்திற்கு வணக்கம் செலுத்துவதாகவும், மணிப்பூரின் பெயரிலேயே ரத்தினம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மணிப்பூரில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள், உள்கட்டமைப்பு, சுகாதார அடிப்படையில், மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வை மேம்படுத்தும் என மோடி கூறினார். மேலும், மலைகள் விலைமதிப்பற்ற பரிசு எனவும், இந்த மக்களின் கடின உழைப்பின் அடையாளமாகவும் உள்ளதாக குறிப்பிட்டார்.
அங்கு அமைதி ஏற்படுத்துவதற்கான மத்திய அரசின் தொடர் முயற்சிகள், மலைகள் மற்றும் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களிடையே மோதலுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்ததாக பிரதமர் கூறினார்.
மேலும், மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புவதாகவும், அந்த மாநில மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
“மணிப்பூரின் வளர்ச்சியை விரைவுபடுத்த மத்திய அரசு பாடுபடுகிறது“
தொடர்ந்து பேசிய மோடி, மணிப்பூரின் வளர்ச்சிப் பாதையில் பயணத்தை விரைவுபடுத்த மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாக கூறினார். மேலும், வளர்ச்சிக்கு அமைதி மிக முக்கியமானது என குறிப்பிட்ட அவர், அங்குள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மணிப்பூரில், ரயில்வே, சாலை இணைப்புத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். மேலும், இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் எனவும், வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை உறுதி செய்ய விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அதோடு, முன்னதாக, டெல்லியில் எடுக்கப்பட்ட முடிவுகள் மணிப்பூரை எட்ட பல தசாப்தங்கள் ஆனதாகவும், ஆனால் தற்போது, நாட்டின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து மணிப்பூர் முன்னேறி வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.





















