PM Modi : ”கூட்டத் தொடரில் கருத்தொற்றுமையுடன் அனைத்து கட்சிகளும் செயல்பட வேண்டும்” - பிரதமர் மோடி பேட்டி
இன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடரில் அனைத்து கட்சிகளும் கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பவர் 29-ஆம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 17 வேலை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும். கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சமாஜவாதி கட்சியின் நிறுவனரும், மக்களவை எம்.பி.யுமான முலாயம் சிங் யாதவ் மற்றும் மூத்த அரசியல் தலைவர்களின் மறைவுக்கு உறுப்பினர்கள் இரங்கல் தெரிவிப்பார்கள். இந்தியா ஜி-20ன் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ளதற்குப் பிறகு, தொடங்கவுள்ள முதல் கூட்டத்தொடர் என்பதால் இந்த கூட்டத்தொடர் சிறப்புவாய்ந்ததாக கருதப்படுகிறது.
கூட்டத்தொடர் இன்று நடைபெறவுள்ளதால், நாடு முழுவதும் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே டெல்லியில் கூடியுள்ளனர். இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பல்வேறு விவகாரங்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க முற்படும். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காரசார விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு மாநிலங்களவைத் தலைவராக அவர் வழிநடத்தப்போகும் முதல் கூட்டத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
"கூட்டத் தொடர் முக்கியமானது"
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” இந்த கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது. இதில் அனைத்து கட்சிகளும் கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும், இந்த கூட்டத் தொடரில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் கூட்டத் தொடர் நடைபெறுவது முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
”மிகப்பெரிய கவுரவம்”
இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, “ஜி20 அமைப்புக்கு தலைமையேற்றிருப்பது, இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவும். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பதை உலகமே உற்று நோக்குகிறது” என்றார்.
இதற்கிடையில், முதல்முறையாக இந்த கூட்டத் தொடரில் பங்கேற்கும் புதிய எம்.பிக்கள் மற்றும் இளம் எம்.பிக்கள் ஆகியோருக்கு கூட்டத் தொடரின் விவாதங்களில் பங்கேற்க அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் கேட்டுக்கொண்டார். தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய வாய்ப்புகளை மனதில் கொண்டும், அனைத்து கட்சி தலைவர்களும் விவாதங்கள் மூலம் முக்கியமான முடிவுகளை இந்த அமர்வில் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க
RBI Repo rate : ரெப்போ வட்டி விகிதத்தை 5-வது முறையாக உயர்த்தியது ரிசர்வ் வங்கி..!
Gold, Silver Price Today : தங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம் இதுதான்!