Operation Ganga : "மக்களுடன் துணை நிற்கும் உறுதியை குறிக்கிறது".. ஆபரேஷன் கங்கா குறித்து பிரதமர் மோடி பெருமிதம்..!
'ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு மீட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. கிட்டத்தட்ட 16 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. போரின்போது, பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷியா, தங்களின் படைகளை திரும்பப்பெற்றது. சமீப காலமாகவே, போரில் ரஷியா பின்னடைவுகளை சந்தித்து வந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியது.
போரின்போது சிக்கிய இந்தியர்கள்:
போரின்போது உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்தது. 'ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு மீட்டது. ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவாக் குடியரசு வழியாக இந்தியர்களை மீட்க மத்திய அமைச்சர்களே அங்கு சென்றது பெரிதும் பாராட்டப்பட்டது.
பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி, அப்போதைய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் ஆகியோர் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக போலந்து மற்றும் ருமேனியா சென்றனர்.
ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் அதிரடி:
இதனிடையே, 'ஆபரேஷன் கங்கா' பற்றி ஆவணப்படம் ஒன்றை, History TV 18 தயாரித்துள்ளது. அது, இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்நிலையில், 'ஆபரேஷன் கங்கா' ஆவணப்படம் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, "ஆபரேஷன் கங்கா என்பது எவ்வளவு கடினமான சவாலாக இருந்தாலும் நம் மக்களுடன் நிற்கும் உறுதியை குறிக்கிறது. இது இந்தியாவின் அசைக்க முடியாத உணர்வையும் பிரதிபலிக்கிறது. இந்த ஆவணப்படம் இந்த நடவடிக்கை தொடர்பான அம்சங்களைப் பற்றி அனைத்து தகவல்களை கொண்டதாக இருக்கும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“The Evacuation: Operation Ganga” என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ள ஆவணப்படம் குறித்து History TV 18 நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "24 பிப்ரவரி 2022 அன்று, உக்ரைனில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள், தீவிரமான போர் மண்டலத்தில் சிக்கித் தவித்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை ஒன்றை இந்தியா தொடங்கியது.
90 சிறப்பு விமானங்களில் 18 நாடுகளில் இருந்து 22,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் 147 வெளிநாட்டினரை மீட்டு, வரலாறு படைத்தது. ஹிஸ்டரிடிவி 18ல் #நாளை இரவு 8 மணிக்குத் திரையிடப்படும் ‘தி இவாக்குவேஷன்: ஆபரேஷன் கங்கா’ ஆவணப்படத்தை பாருங்கள்" என குறிப்பிட்டது.