PM Modi: நாட்டின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்ஏஎல் நிறுவனம் 1,000 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலையாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய எரிசக்தி வாரம்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பிப்ரவரி 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும் இந்திய எரிசக்தி வாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 30,000 பிரதிநிதிகள், 1,000 கண்காட்சியாளர்கள் மற்றும் 500 பேச்சாளர்கள் இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கின்றனர்.
2016 ஆம் ஆண்டில் பிரதமர் அடிக்கல் நாட்டிய 615 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையானது, ஆரம்பத்தில் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை (எல்.யு.எச்) தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. தற்போது, மிக பெரிய ஹெலிகாப்டர்களையும் தயாரிக்கும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்ஏஎல் நிறுவனம், 3 முதல் 15 டன் எடை கொண்ட 1,000 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
ஆரம்பத்தில், இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு சுமார் 30 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும், பின்னர் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக 60 மற்றும் பின்னர் 90 ஆக உயர்த்தப்படலாம் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்பு
இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் (எல்.சி.எச்) மற்றும் இந்திய மல்டிரோல் ஹெலிகாப்டர்கள் (ஐ.எம்.ஆர்.எச்) போன்ற பிற ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இந்த தொழிற்சாலை விரிவுபடுத்தப்படும். எதிர்காலத்தில் எல்.சி.எச், எல்.யு.எச், சிவில் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏ.எல்.எச்) மற்றும் ஐ.எம்.ஆர்.எச் ஆகியவற்றின் பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் மறுசீரமைப்புக்கும் இது பயன்படுத்தப்படும்.
பெங்களூருவில் தற்போதுள்ள எச்.ஏ.எல் வசதிகளுடன் தொழிற்சாலையின் அருகாமை, பிராந்தியத்தில் விண்வெளி உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை அதிகரிக்கும் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் போன்ற திறன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெலி-ஓடுபாதை, விமான ஹேங்கர், ஃபைனல் அசெம்பிளி ஹேங்கர், ஸ்ட்ரக்சர் அசெம்பிளி ஹேங்கர், விமான போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பல்வேறு ஆதரவு சேவை வசதிகள் போன்ற வசதிகளை நிறுவிய பின்னர் இந்த தொழிற்சாலை முழுமையாக செயல்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆடை:
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘பாட்டிலற்ற’ முன்முயற்சியின் கீழ், சீருடைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு சீருடையும் சுமார் 28 பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து அதன் மூலம் செய்யப்பட்டது ஆகும்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டுப் பயன்பாட்டிற்கான சோலார் சமையல் இரட்டை-அடுப்பு மாதிரியை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்
கர்நாடகாவில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.