"தேர்தலில் போட்டியிட கூட தைரியம் கிடையாது" சோனியா காந்தியை வம்புக்கு இழுக்கும் பிரதமர் மோடி!
அமேதியை இழந்த காங்கிரஸின் இளவரசர் வயநாட்டையும் இழப்பார் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நேற்று தொடங்கியது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26-ஆம் தேதி நடக்க உள்ளது. மகாராஷ்டிரா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
"வயநாட்டிலும் ராகுல் காந்தி தோல்வி அடைவார்"
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள நான்டெட் மற்றும் ஹிங்கோலி தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, காங்கிரஸ் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
ராகுல் காந்தியை குறிப்பிட்ட பேசிய பிரதமர், "அமேதியை இழந்த காங்கிரஸின் இளவரசர் வயநாட்டையும் இழப்பார். அதனால் ஏப்ரல் 26-ஆம் தேதிக்குப் பிறகு பாதுகாப்பான தொகுதியை தேட வேண்டியிருக்கும்" என்றார். சோனியா காந்தியை விமர்சித்த பிரதமர், இந்திய கூட்டணியை சேர்ந்த சில தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லாததால் மக்களவையை விட்டு வெளியேறி மாநிலங்களவைக்கு செல்கின்றனர்.
முதல்முறையாக, காங்கிரஸ் வேட்பாளருக்கு தொகுதி மக்கள் வாக்களிக்க போவதில்லை. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வேட்பாளரே இல்லை. காங்கிரஸ் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தை சரி செய்ய 10 ஆண்டுகள் தேவைப்பட்டது. இன்னும், நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.