"3வது பதவிக்காலத்தில் உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை உயர்த்துவேன்" - பிரதமர் மோடி
மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தனது மூன்றாவது பதவிக்காலத்தில் உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை உயர்த்துவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
பாஜகவின் கோட்டைகளில் ஒன்றாக மத்தியப் பிரதேசம் கருதப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக, அங்கு பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 15 மாதங்களிலேயே கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சி அமைத்தது.
பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார். மத்திய பிரதேச சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. அங்கு, ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜக தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி பாஜக மூத்த தலைவர்கள் பலர், அங்கு சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போரிடுவேன்"
இந்த நிலையில், டாமோ நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தனது மூன்றாவது பதவிக்காலத்தில் உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை உயர்த்துவேன் என வாக்குறுதி அளித்துள்ளார். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போரிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மக்கள் காங்கிரஸுக்கு ஆட்சியை வழங்கினர். ஆனால், அவர்களின் முதலமைச்சர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு, கருப்பு பணத்தை உருவாக்குவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2014க்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரம் 10 வது இடத்தில் இருந்து 5 வது இடத்திற்கு உயர்ந்தது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்த இங்கிலாந்தை பின்தள்ளினோம்.
2014இல் நாங்கள் ஆட்சிக்கு வரும் போது நாட்டின் பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்தது. படிப்படியாக அது 9, 8, 7 மற்றும் 6 வது இடத்திற்கு உயர்ந்தது. ஆனால், யாரும் அதைப் பற்றி பேசவில்லை. 200 வருடங்கள் நாட்டை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5வது இடத்தை அடைந்ததும் அனைவரும் ஆச்சரியப்பட்டு இந்தியாவை பார்க்க ஆரம்பித்தனர்.
"மக்களுக்கு நல்ல பணிகளை தொடர்ந்து செய்வேன்"
பிரதமராக எனது மூன்றாவது பதவிக் காலத்தில், நாட்டின் பொருளாதாரத்தை உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டு செல்வேன். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அக்கட்சியின் பிரதமர் ஒருவர் கூறியது போல், மாநிலங்களில் 85 சதவீத கமிஷன் முறை செயல்படுத்தப்படும்" என்றார்.
"ஏழை மக்களுக்கான இலவச ரேஷன் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக நான் அளித்த வாக்குறுதியை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் போவதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் இந்த பாவத்தை செய்யட்டும், நான் மக்களுக்கு நல்ல பணிகளை தொடர்ந்து செய்வேன்" என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.