Modi Asean: உலக வளர்ச்சியில் ஆசியான் அமைப்புக்கு முக்கிய பங்கு: இந்தோனேசியாவில் பிரதமர் மோடி
வரலாறு மற்றும் புவியியல் ஆகியவை இந்தியாவையும் ஆசியான் அமைப்பையும் இணைக்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம், 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் என மொத்த 40 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இச்சூழலில், ஆசியான் மற்றும் 18 ஆவது கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று இந்தோனேசியா புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் தன்னை வரவேற்பதற்காக கூடியிருந்த இந்தோனேசியா வாழ் இந்தியர்களை சந்தித்த மோடி, அவர்களுக்கு கைகொடுத்து மகிழ்ந்தார்.
"கிழக்காசிய நாடுகளுக்காக இந்தியா வகுத்த கொள்கையின் மைய தூண் ஆசியான்"
பின்னர், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இன்று நடைபெற்ற 20ஆவது ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கிழக்காசிய நாடுகளுக்காக வகுக்கப்பட்ட கொள்கையில் ஆசியான் அமைப்பு எந்தளவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை விளக்கி பேசினார்.
"கிழக்காசிய நாடுகளுக்காக இந்தியா வகுத்த கொள்கையின் மைய தூணாக ஆசியான் அமைப்பு உள்ளது. இந்தியாவின் இந்தோ-பசிபிக் முன்முயற்சியில் இது ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா-ஆசியான் அமைப்புக்கு இடையேயான கூட்டணி அதன் நான்காவது தசாப்தத்தை எட்டியுள்ளது.
மேலும், உச்சி மாநாட்டின் இணைத் தலைவராக இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.
"இந்தியா - ஆசியான் இணைப்பு"
எங்கள் வரலாறு மற்றும் புவியியல் ஆகியவை இந்தியாவையும் ஆசியான் அமைப்பையும் இணைக்கின்றன. அதனுடன், நமது பகிரப்பட்ட மதிப்புகள், பிராந்திய ஒருங்கிணைப்பு, அமைதி, செழிப்பு மற்றும் பல துருவ உலகம் ஆகியவற்றில் நமது பகிரப்பட்ட நம்பிக்கை நம்மை ஒன்றிணைக்கிறது.
ஆசியான் அமைப்பு, இந்தியாவின் கிழக்குக் கொள்கையின் மையத் தூண். ஆசியான் - இந்தியா, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை மையப்படுத்திய உறவில் ஆசியான் கண்ணோட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது. 'வளர்ச்சியின் மையம்: ஆசியான் அமைப்பு' என்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருள்.
ஆசியான் அமைப்பு முக்கியமானது. ஏனெனில், இங்கு அனைவரின் குரலும் கேட்கப்படுகிறது. ஆசியான் வளர்ச்சியின் மையமாக உள்ளது. ஏனெனில், உலக வளர்ச்சியில் ஆசியான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா தலைமை வகிக்கும் G20 அமைப்பின் கருப்பொருளாக 'வசுதேவ குடும்பகம் - ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் உள்ளது.
உலகளாவிய தெற்கின் குரலைப் பெருக்க அழைப்பு விடுக்கிறேன். 2022 ஆம் ஆண்டில் இந்தியா-ஆசியான் நட்பு தினம் கொண்டாடப்பட்டு, விரிவான வியூக ரீதியான கூட்டாண்மையாக உறவு உயர்த்தப்பட்டது" என்றார்.