ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாத கார்! பரிதாபமாக பறிபோன உயிர் - காரை ஓட்டியது யார் தெரியுமா?
கேரளாவில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட மறுத்து கார் காரணமாக 61 வயதான பெண்மணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தலசேரி. இந்த பகுதியில் உள்ளது எரண்ஹோலி நாயனார் சாலை. இந்த சாலையில் வசித்து வந்தவர் ருகியா. இவருக்கு வயது 61. இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சை அழைத்துள்ளனர்.
ஆம்புலன்ஸ்க்கு வழிவிட மறுத்து கார்:
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பாதிக்கப்பட்ட நோயாளி ருகியாவை அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸில் வேகமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, அந்த ஆம்புலன்சிற்கு முன்னால் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. மருத்துவ அவசரத்திற்காக சென்று கொண்டிருந்த இந்த ஆம்புலன்ஸிற்கு அந்த கார் வழிவிடாமல் சென்றது.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தொடர்ந்து ஒலி எழுப்பியும் அந்த கார் வழிவிடாமல் இருந்துள்ளது. இதனால், மருத்துவமனைக்கு விரைந்து செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தவித்துள்ளார். சுமார் அரைமணி நேரம் அந்த கார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூதாட்டி ருகியாவை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல் இருந்துள்ளது. இதையடுத்து, ஆம்புலன்ஸில் ஓட்டுநருடன் இருந்த உதவியாளர் அந்த காரின் எண்ணை பதிவு செய்து கொண்டார்.
காரை ஓட்டியது யார்?
பின்னர், மருத்துவமனைக்கு ருகியாவை கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், உரிய நேரத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வராத காரணத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு வழிவிடாத கார் ஓட்டுனரே காரணம் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கதிரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் ஓட்டிச் சென்றவர் ராகுல் ராஜ் என்றும், அவர் ஒரு மருத்துவர் என்றும் தெரியவந்தது. ஒரு மருத்துவரே நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் காரை ஓட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் ராகுல் ராஜுற்கு 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் ஓட்டிச் சென்ற மருத்துவர் ராகுல் ராஜுற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.





















