இந்துக்களுக்கே பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லை: நாடாளுமன்றத்தில் திருமா சொன்ன காரணம்!
நாடாளுமன்றத்தில் வெடித்த நம்பிக்கையில்லா தீர்மானம் - பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்திய திருமாவளவன்
பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கையை இழந்ததால், அவரை பதவி விலகுமாறு மக்களவையில் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
நடந்து வரும் மழைக்கால கூட்டத்தொடரில் பாஜக அரசு மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இன்றைய கூட்டத்தொடரில், மணிப்பூர் விவகாரத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முன் வைத்தன. 12 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியதும் காங்கிரஸ் சார்பில் அசாம் மாநில எம்பி தருண் கோகோய், மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார். பின்னர் தனது உரையை தொடர்ந்த அவர், மணிப்பூர் விவகாரத்தில் நீதி வேண்டும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாகவும், பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் தனது தோல்வியை ஒப்பு கொள்ள வேண்டும் என்றும், மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைகள், உயிரிழப்புகள், பற்றி எரிந்த வீடுகள், மக்களின் அழுகுரல் என அடுக்கடுக்கான கேள்விகளை எதிர்கட்சிகள் முன் வைத்தன. மேலும், மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விசாரணை குழுவை அமைத்ததால், மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றும் குரலெழுப்பினர்.
விவாத்தின் இடையே, பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ”இந்து பெரும்பான்மை மக்களுக்கு பாஜக அரசு எதிராக இருப்பதால், கர்நாடகாவில் இந்து சமூகத்தை சேர்ந்த மக்களே பாஜகவை வீழ்த்தி விட்டு காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை இழந்து இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவை மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை நாடு இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எஸ்.இ., எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு நிரப்பப்பட வில்லை என்றும், அவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுவதாகவும், திட்டமிட்டு சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை கிடைப்பதில்லை என்றும் பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த திருமாவளவன், பாஜக அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.
மேலும், அரசின் மீதான நம்பிக்கையின்மைக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.
தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பேசிய டி.ஆர். பாலு, ”மோடி அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறார். 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் மதுரையில் எயிம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என அடிக்கல் நாட்டிய மத்திய அரசு, இதுவரை மருத்துவமனை கட்ட ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை” என விமர்சித்தார்.
முன்னதாக பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை ராகுல்காந்தி தொடங்கி வைப்பதாக இருந்தது. அவர் விவாதத்தை ஏன் தொடங்கவில்லை என பாஜக எம்பிகள் முழக்கமிட்டனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பிக்கள், அவையில் பிரதமர் ஏன் இல்லை என கேள்வி எழுப்பினர்.