I.N.D.I.A Meet: இந்தியா கூட்டணி கட்சிகளின் அடுத்த கூட்டம்.. தேதி குறித்த சிவசேனா.. தயாராகுமா குறைந்தபட்ச செயல் திட்டம்?
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி விருந்தளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா (எதிர்க்கட்சிகள்) கூட்டணி கட்சிகளின் அடுத்த கூட்டம், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி, மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடத்தப்படும் என உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி இன்று அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி:
இந்த நிலையில், கூட்டத்தின் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி விருந்தளிப்பார் என்றும் அதை தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இந்த கூட்டத்தை நடத்த உள்ளது. முதலில் இந்த கூட்டம், ஆகஸ்ட் மாதம் 25, 26 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆளாத மாநிலத்தில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறை.
ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதா தளம் ஆளும் பிகார் மாநிலம் பாட்னாவில் முதல் கூட்டமும் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.
தயாராகுமா குறைந்தபட்ச செயல் திட்டம்?
வரவிருக்கும் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக 5 முதல் 6 கூட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மும்பையில் நடைபெற உள்ள கூட்டத்தில், பல்வேறு விவகாரங்கள் குறித்த முடிவுகளை எடுக்க 11 உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து இறுதி செய்வதற்கு ஒரு துணைக்குழுவும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிகள், பேரணிகள், மாநாடுகளை திட்டமிட மற்றுமொரு கமிட்டியும் அமைக்கப்பட உள்ளது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி பஞ்சாயத்து தீர்த்து வைக்கப்படுமா?
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணி சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பரஸ்பரம் விமர்சித்து கொண்டிருப்பது இந்தியா கூட்டணயில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மூன்றாவது கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாநில முதலமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், மமதா பானர்ஜி, முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.