I.N.D.I.A Alliance Meet President: மணிப்பூர் விவகாரம்.. குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் ’இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்கள்
மணிப்பூர் மட்டும் இல்லாது, ஹரியானா விவகாரம் மற்றும் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் சென்ற 21 எம்.பி.க்கள் குழுவுடன், ’இந்தியா’ எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவர்களையும் இன்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 11.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, மணிப்பூரில் இனக்கலவரத்தால் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ள நிலை குறித்தும், அம்மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குடியரசுத் தலைவருடன் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசவுள்ளனர்.
மேலும் இந்த சந்திப்பில், மணிப்பூர் மட்டும் இல்லாது, ஹரியானா விவகாரம் மற்றும் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
முன்னதாக திங்களன்று அதாவது ஜூலை 31ஆம் தேதி, மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் நேரம் கேட்டதையடுத்து இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
லோக்சபா அதாவது மக்களவை மற்றும் ராஜ்யசபா அதாவது மாநிலங்களவை என இரண்டிலும் மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு இனரீதியாக பிளவுபட்டு பெரும் கலவரத்திற்கு ஆளாகிய மணிப்பூர் மாநிலத்தை பார்வையிட்ட பின்னர், இந்திய கூட்டணி தலைவர்களிடம் நிலைமையை விளக்கியுள்ளனர். இக்குழுவினர் மலைகள் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்களிடம் நிலமை குறித்தும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் தெரிந்து கொண்டர்.
மணிப்பூரின் உண்மை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள சென்ற 21 எம்.பி.க்கள் கொண்ட குழுவில் தமிழ்நாட்டில் இருந்து கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோரும் சென்றனர். மணிப்பூர் ஆய்வு சம்பந்தமாக கனிமொழி எம்.பி தெரிவிக்கையில், ”நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்ணை, பெண் எம்.பிக்கள் மட்டும் பார்க்க முடிந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணால் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து வெளிவரமுடியவில்லை. மேலும், அவரது தாயார் தனது கணவனை இழந்தும், மகளுக்கு இப்படியான துயரம் ஏற்பட்டதை எண்ணியும் தொடர்ந்து மன அழுத்தில் உள்ளனர்” என தெரிவித்தார்.
முன்னதாக, மணிப்பூரில் இரண்டு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியான பின்னர் பிரதமர் மோடி, "இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்ப முடியாது" என்று கூறியிருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வரும், 8 முதல் 10 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. 10ஆம் தேதி இது தொடர்பாக பிரதமர் விளக்கமுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரை சந்திப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.